நெதன்யாகுவிற்கு எதிராக கைதாணைபிறப்பித்த துருக்கி
8 கார்த்திகை 2025 சனி 13:14 | பார்வைகள் : 154
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டில் துருக்கி கைதாணைகளை பிறப்பித்துள்ளது.
மொத்தம் 37 பேர்கள் மீது துருக்கி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இயல் ஜமீர் ஆகியோரும் குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஆனால், பிரதமர் நெதன்யாகு உட்பட 37 பேர்களின் முழுமையானப் பட்டியலை துருக்கி நிர்வாகம் வெளியிடவில்லை. காஸாவில் இஸ்ரேல் திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு காரணமானவர் என குறிப்பிட்டு பிரதமர் உட்பட இந்த 37 அதிகாரிகள் மீது துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், பாலஸ்தீன நட்புறவை ஆதரிக்கும் வகையில், காஸாவில் துருக்கி நிறுவியிருந்த மருத்துவமனையை மார்ச் மாதம் இஸ்ரேல் குண்டு வீசி அழித்ததையும் துருக்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், துருக்கியின் இந்த கைதாணை என்பது வெறும் விளம்பர நாடகம் என்றே இஸ்ரேல் விமர்சித்துள்ளது. இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் Gideon Saar தெரிவிக்கையில்,
துருக்கியின் இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மொத்தமாக நிராகரிப்பதாகவும், கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் துருக்கி ஜனாதிபதி எர்டோகனை கொடுங்கோலன் என்றும் அமைச்சர் Gideon Saar விமர்சித்துள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக குறிப்பிட்டு சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா முன்னெடுத்த வழக்கில் கடந்த ஆண்டு துருக்கியும் இணைந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிட்டு அக்டோபர் 10 ஆம் திகதி முதல் போர் நிறுத்தமொன்றை அமுலுக்கு கொண்டுவந்தாலும், இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் மற்றும் மீறல்களை முன்னெடுத்து வருவதுடன், ஹமாஸ் படைகளை மொத்தமாக அழிக்கும் வரையில் நடவடிக்கை தொடரும் என்றும் அச்சுறுத்தி வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan