மெக்சிக்கோ ஜனாதிபதியிடம் அத்துமீற முயன்ற நபர்!
6 கார்த்திகை 2025 வியாழன் 16:45 | பார்வைகள் : 211
மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் பார்டோ (Claudia Sheinbaum Pardo), தலைநகர் மெக்சிக்கோ சிட்டி வீதியில் மக்களோடு உரையாடிச் சென்றபோது, போதையில் இருந்த நபர் ஒருவர் தம்மிடம் அத்துமீறி முத்தமிட முயன்றது தொடர்பாக, அந்நாட்டுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம், மெக்சிக்கோவில் பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பாலியல் துன்புறுத்தலின் உயர்நிலைக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
தலைநகர் மெக்சிக்கோ சிட்டி பகுதியில் கல்வி அமைச்சகத்தின் அலுவலகம் நோக்கி ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தனது குழுவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் அவர் மக்களுடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அங்கு வந்த மதுபோதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜனாதிபதி ஷீன்பாமை கட்டியணைத்து, அவரது இடுப்பு மற்றும் மார்புப் பகுதிகளைத் தொட்டு, முத்தமிடவும் முயன்றுள்ளார்.
ஜனாதிபதி ஷீன்பாம் அந்த நபரின் பிடியில் இருந்து விலகி, அந்தச் சூழலைச் சிரித்தபடி கையாண்டார்.
இதையடுத்து, அங்கிருந்த பாதுகாவலர்கள் அந்த நபரை உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அந்த நபர் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக மெக்சிக்கோ சிட்டி மேயர் கிளாரா ப்ருகாடா (Clara Brugada) தெரிவித்துள்ளார்.
தமக்கு ஏற்பட்ட இந்த அத்துமீறல் குறித்து ஜனாதிபதி ஷீன்பாம் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில்,
இதுகுறித்து முறையான முறைப்பாடு அளிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு பெண் என்ற ரீதியில் நான் அனுபவித்த ஒன்று இது.
ஆனால், நம் நாட்டில் பெண்கள் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று இது என்பதால் நான் முறைப்பாடு அளிக்க முடிவு செய்துள்ளேன். இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல.
ஒட்டு மொத்த பெண்கள் மீதான தாக்குதல். இதுபோன்ற அத்துமீறல்களை நான் ஜனாதிபதியாவதற்கு முன்பே, மாணவியாக இருந்த போதும் எதிர்கொண்டுள்ளேன்.
மேலும், இதுபோன்ற அத்துமீறல்கள் மெக்சிக்கோவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் கிரிமினல் குற்றமாக (Criminal Offence) அறிவிக்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான துன்புறுத்தலைக் கையாள்வதற்கான சட்டங்களை மீளாய்வு செய்யுமாறும் தனது அமைச்சரவைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்தும், மெக்சிக்கோவில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்தும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan