கரூர் கலெக்டர், எஸ்பி இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: அண்ணாமலை

29 புரட்டாசி 2025 திங்கள் 10:53 | பார்வைகள் : 125
கரூரில் 41 பேர் பலியான .நடிகர் விஜய்யின் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு கலெக்டர், போலீஸ் எஸ்பி இருவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.
நடிகர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது;
41 அப்பாவி உயிர்களை பறி கொடுத்துள்ளோம். 56க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கரூர் மாநகரம், மாவட்டம் முழுவதும் அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்கின்ற அளவுக்கு இந்த நிகழ்வு பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு வாரம் கழித்து 40 பேரின் இல்லங்களுக்குச் சென்று ஆறுதல் சொல்ல, காசோலை வழங்க இருக்கின்றோம்.
கரூர் சம்பவத்தில் பல தவறுகள், குளறுபடிகள் நடந்திருக்கிறது. பொதுமக்கள் கூடும் போது சரியான இடத்தை கொடுக்கிறோமா? கூட்டத்தை கட்டுப்படுத்துகிறோமா என்றால் இல்லை.
கள்ளக்குறிச்சியில் 64 பேரின் மரணத்தை தாண்டி, கடந்தாண்டு சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலி என வரிசையாக கூட்டத்தை கட்டுப்படுத்தி, சமாளிப்பதில் ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்து கொண்டே இருக்கிறது.
எனவே எங்களின் முதல் குற்றச்சாட்டு மாநில அரசின் மீதுதான். காரணம் சரியான இடத்தில் அனுமதி கொடுப்பது. சரியான இடம் என்றால் அனுமதியே தராதீர்கள். இல்லை என்று சொல்லுங்கள், அப்படி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுங்கள்.
வேலுச்சாமிபுரம் ஒரு சின்ன சந்தை. அங்கு கூட்டம் நடத்த வாய்ப்பே கிடையாது. எதற்கு அதை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தவெகவுக்கு கொடுத்த அனுமதி கடிதத்தை நான் பார்த்தேன். அவர்கள் கேட்டது லைட் அவுஸ் ரவுண்டானா, உழவர் சந்தை பக்கம் கேட்டு இருக்கின்றனர்.
மாவட்ட கலெக்டர், எஸ்பி இவர்கள் இடத்தை சரியாக தேர்வு செய்யவில்லை. இது முதல் தவறு. 500 பேர் பந்தோபஸ்தில் இருந்தனர் என்று பொறுப்பு டிஜிபி கூறுகிறார். 500 பேர் எல்லாம் இல்லை. வண்டிக்குள் இருந்தவர்கள், அதி விரைவு படையினர் என இவர்களை எல்லாம் சேர்த்துத்தான் 500 பேர். தமிழக போலீஸ் 500 பேர் இல்லை. கீழே இருந்த (சாலையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த) போலீஸ்காரர்கள் எத்தனை பேர்? 100 பேர் கூட இல்லை. அந்த கணக்கு எழுதி 500 என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கூட்டம் வரும் என்று தெரியும், எண்ணிக்கையை விடுங்கள். சரியான அளவு காவல்துறையை போட்டு இருக்க வேண்டும். 500 போலீசார் அங்கு இல்லை. இவ்வளவு பேர் கூடும் இடத்தில் குறைந்த காவலர்களை கொண்டு இவர்கள் என்ன பாதுகாப்பு கொடுத்திருக்கின்றனர்.
ஒரு பொது இடத்தில் காவல்துறை அனுமதி கொடுக்கும் போது 100 தடவை யோசிக்க வேண்டும். வேலுச்சாமிபுரத்தில் ஆம்புலன்சே போகாத ஒரு சந்தில் அனுமதி கொடுத்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர், எஸ்பி இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்.குறைந்தபட்சம் சஸ்பெண்டாவது செய்யணும். மற்ற அதிகாரிகளுக்கு இது எச்சரிக்கையாக அமையும்.
மாவட்ட கலெக்டர், எஸ்பி மீது முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன ஒரு பம்மாத்து வேலை பண்ணிட்டு இருக்கார்? இந்தியாவில் 10, 15 பேர் உயிரிழக்கின்றனர் என்றால் பல அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றன.
இந்திய விமான சாகச கண்காட்சியின் போது, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் சென்று பார்க்கின்றனர். 5 பேர் இறக்கின்றனர். 71 பேர் மருத்துவமனையில் அட்மிட் ஆகின்றனர். தமிழகத்தில் அதிகம் பேர் சேரும் எந்த இடத்திலும்கூட திமுக தனது 4 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் எதையும் சரிவர கவனிக்கவில்லை.
சம்பவம் நடந்தபின்னர் வருவதற்கு முதல்வரா? இல்லை... ஆய்வுக் கூட்டம் நடத்தி அறிவுரைகள் கொடுக்கின்றனரா? எனவே முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறுவது சரியான கருத்து.
ஒருநபர் விசாரணை ஆணையம் என்பது போதாது. உடனடியாக சிபிஐ விசாரணை வேண்டும். தாமாக முன் வந்து சிபிஐ விசாரணையை முதல்வர் கேட்க வேண்டும்.
அந்த கூட்டத்தில் யாராவது விஷக்கிருமிகள் இருந்து கூட்டத்தினரை தூண்டிவிட்டனரா? ஆம்புலன்ஸ் எப்போது வந்தது? தடியடி எதற்காக நடத்தினார்கள்?கரண்ட் எதற்காக போனது? இந்த எல்லா விஷயங்களையும் சிபிஐ நுணுக்கமாக விசாரிக்க வேண்டும்.
ஏன் என்றால் கூட்டத்தில் செருப்பு வீசுகின்றனர். ஒரு கூட்டத்தில் தலைவன் பேசும்போது அங்கே இருக்கிற யாரும் செருப்பு வீசமாட்டாங்க, வெளியாள் தான் வீசியிருப்பான். ஏன் கரண்ட் கட் ஆனது என்று சிபிஐ விசாரிக்க வேண்டும். இனி தமிழகத்தில் எங்கும் இது போன்று சம்பவம் நடக்கக்கூடாது.
எங்களின் குற்றச்சாட்டு விஜய் மீது உள்ளது. ஒரு நடிகரை பார்க்க சினிமா ஸ்டாரை பார்க்க கிராமத்தில் இருந்து மக்கள் வரத்தான் செய்வார்கள். மொத்தம் கரூர் மாவட்டத்திற்கும் ஒரே இடத்தில் தான் பேச அனுமதி. மற்ற அரசியல் கட்சிகள் என்ன பண்ணுகிறார்கள் என்றால் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பாயிண்ட் அமைக்கின்றனர்.
ஒரே பாயிண்ட் வைத்தால் 20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் வராமல் என்ன செய்வார்கள்? அதிலும் வார இறுதியில் வைக்கிறீர்கள், சனிக்கிழமை என்னும் போது மக்கள் அனைவரும் வரத்தான் செய்வார்கள். சனிக்கிழமை வைத்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வரத்தான் செய்வார்கள்.
ஒரு தலைவனை காட்டுவோம், சினிமா ஸ்டார் வருகிறார், கூட்டத்தை காட்டுவோம் என்று குழந்தையை அழைத்துக் கொண்டு வரத்தான் செய்வார்கள். விஜய் இதை எல்லாம் யோசிக்க வேண்டும். எந்த ஒரு தலைவரும் தமது கூட்டத்தில் ஒருவர் இறக்க வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். நடிகர் விஜய்க்கும் அப்படித்தான். அவருக்கு அதுபோன்ற ஒரு மனப்பான்மை கிடையாது... பாவம்.
நாம் செல்லும்போது உபத்திரவம் நடக்குது என்று பார்க்க வேண்டும். இனி வீக் எண்ட் கான்செப்ட் (week end concept) என்பதில் இருந்து விஜய் வெளியே வரவேண்டும். மக்களுக்கு உபத்திரவம் கொடுக்கக்கூடாது என்று சனிக்கிழமை என்று கூறுகிறீர்கள். ஆனால் சனிக்கிழமை அன்று தான் அதிக கூட்டம் வருகிறது.
நான் விஜய் மீது நேரிடையாக குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஒரு மாவட்டத்திற்கு ஒரு பாயிண்ட்(பேச போகும் இடம்) மட்டும் தேவையா என்று விஜய் ஆலோசனை செய்ய வேண்டும். 2ம் கட்ட தலைவர்கள் உருவாகும் வரை ஒரு கட்சிக்கு இதுபோன்ற பிரச்னைகள் வரத்தான் செய்யும்.
ஒரு கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. கூட்டம் நடத்த விஜய்க்கு உரிமை உள்ளது, அவரை பார்க்க வருவதற்கு கூட்டத்திற்கும் உரிமை உள்ளது. இந்த இடைப்பட்ட தரகர் யார் என்றால் அதுதான் அரசு. அந்த வேலையை அரசு செய்யவில்லை.
அரசை பொறுத்தவரையில் 2 இடங்களில் தோற்றுள்ளனர். ஒரு தலைப்பட்சமாக, பாரபட்சமாக எதிர்க்கட்சிக்கு நடந்து கொள்கின்றனர். எனவே அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். எனவே எஸ்பி, கலெக்டர் இருவரையும் சஸ்பென்ட் செய்ய வேண்டும்.
இன்றைக்கு விஜய் வருத்தத்தில் இருப்பார். அவரை யாரும் கார்னர் பண்ண வேண்டும். இதில் இருந்து மீண்டு வரவேண்டும். எல்லா மக்களுக்கும் விஜய் ஆதரவாக நிற்க வேண்டும். தனது பயணத்தின் வடிவமைப்பை அவர் மாற்ற வேண்டும். வீக் எண்ட் கூட்டம் என்பதை மாற்ற வேண்டும்.
விஜய் காரில் போகும் பைக்கில் 100 பேர் துரத்துகின்றனர். இது எல்லாம் என்ன? மேலே தொங்குவது, கோயில் மேல், மசூதி மேல், சர்ச் மேல் நிற்பது? டிரான்ஸ்பார்மர் மேல் நிற்பது? எதற்கு அப்படி?
உங்களின் தலைவனை பார்க்க வேண்டுமா? ஆனந்தமாக பாருங்க, டிவியில் பாருங்க. உங்களுக்கு அங்கே பாதுகாப்பு இல்லை என்றால் ஏன் பார்க்கிறீர்கள்? யார் மீது குறை சொன்னாலும் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொருத்தரும் யோசிக்கணும்.
பாஜ நாங்களும் கூட்டம், மாநாடு போடுகிறோம், அங்கு விசாலமாக, விஸ்தாரமாக உள்ளது என்றால் வாங்க, இல்லை என்றால் டிவியில் பாருங்கள். நியூஸ் பேப்பரில் படியுங்கள். இதுவே முதலும், கடைசியுமாக ஒரு சம்பவம் இருக்க வேண்டும். இனி ஒரு அரசியல் மாநாட்டில் ஒருவர் இறந்தால் நாம் எல்லாரும் தலைகுனிந்து நிற்க வேண்டும். கரூர் மாவட்ட பாஜ சார்பில் ரூ.1 லட்சம் தரப்படும்.
இன்றைக்கு விஜய் லேட்டாக வந்தார் என்பது முக்கியம் கிடையாது. எதற்காக மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை என நீண்ட நேரம் அனுமதி ஏன் கொடுத்தீர்கள்? தவெக அனுமதி கடிதத்தில் 3 மணி முதல் 10 மணி வரை என்று இருக்கிறது. விஜய் 3 மணிக்கும் வரலாம், இரவு 10 மணிக்கும் வரலாம்.காவல்துறை எதற்கு 7 மணிநேரம் தருகிறீர்கள்? ரோட்ஷோ வராங்க, பார்க்கிறாங்க போறாங்க, 2 மணி நேரம் கொடுங்கள்.விஜய் தாமதமாக வந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
விஜய் பயணத்தின் வடிவமைப்பில் கோளாறு உள்ளது. சனிக்கிழமை வேண்டாம், குழந்தைகள்,பெ ண்கள் வரத்தான் செய்வார்கள், நீங்கள் ஏன் அனுமதி தருசிறீர்கள்? தராதீர்கள்.
எனக்கு இந்த ஒருநபர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை. ஏன் என்றால் ஒருநபர் ஆணையத்தின் நீதிபதியை தேர்வு செய்வது யார்.. முதல்வர்தான். அதில் நியாயம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சிபிஐக்கு கொடுங்கள், இல்லை என்றால் தலைமை நீதிபதிக்கு எழுதுங்கள்.
சம்பவத்தின் காரணம் என்ன என்பதை பார்க்க வேண்டும். எனவே சிபிஐக்கு மாற்றுங்கள். யார் செருப்பு வீசியது? எப்படி கலவரம் ஆனது? அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விசாரிக்க வேண்டும். அஜித்குமார் வழக்கில் விசாரணையை ஏன் சிபிஐக்கு கொடுத்தீர்கள்? இன்றைக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சிபிஐயிடம் கொடுங்கள்.
40 பேர் பலியானதற்கு விஜய் தான் காரணம் என்றால் நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். விஜய் மீது இருக்கும் தவறு, அனுபவம் இல்லாத காரணத்தினால் பயணத்தின் வடிவமைப்பு சரியான முறையில் செய்ய வேண்டும், அதை அவர்கள் பண்ணவில்லை.
வேலுச்சாமிபுரம் என்ற இடம் இதுபோன்ற கூட்டம் நடத்த தகுதியான இடம் இல்லை. 2000 பேர் 5000 பேர் வருவதற்கு தான் அந்த இடம் சரியாக இருக்கும். 27000, 30000 பேருக்கான இடம் கிடையாது.
எனவே இடம் முதல் பிரச்னை, பாதுகாப்பு குளறுபடிகள் 2வது பிரச்னை. பிரசாரத்தின் வடிவம் 3வது பிரச்னை. உளவுத்துறை என்னதான் செய்கிறீர்கள்? எல்லாம் முடிந்த பின்னர் பேட்டி கொடுப்பது மட்டும் தான் உளவுத்துறை டிஜிபி, ஏடிஜிபியின் வேலையா?
உளவுத்துறையை பொறுத்தவரை தமிழகத்தில் political intelligence கொடுக்கிற துறையாக மாறிவிட்டது. முதல்வர் வீட்டுக்கு காலை 8 மணிக்குச் சென்று அனைத்தையும் விரிவாக கொடுக்க வேண்டும். அது தான் உளவுத்துறையின் வேலை. ஆனால் அண்ணாமலை இட்லி சாப்பிட்டாரா? பூரி சாப்பிட்டாரா? இதுதான் அவர்கள் (உளவுத்துறை) வேலை. 4 ஆண்டுகளாக உளவுத்துறை தோல்வி இது சாபக்கேடு.
இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1