கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில் நடந்தது என்ன?

29 புரட்டாசி 2025 திங்கள் 08:53 | பார்வைகள் : 152
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தில், நடந்தது என்ன என்ற விபரம் தெரியவந்துள்ளது. அத்துடன், நெரிசல் சம்பவத்திற்கு பாதுகாப்பு குளறுபடி காரணமா என்பதற்கு, ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் அளித்துள்ளார். த.வெ.க., தலைவர் விஜய், வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன்படி, நேற்று முன்தினம் நாமக்கல், கரூர் மாவட் டங்களில் பிரசாரம் நடந்தது .
அனுமதி மறுப்பு
நாமக்கல்லில் பிரசாரம் முடிந்து, கரூர் பிரசாரத்திற்கு அவர் வர, பல மணிநேரம் தாமதமானது. இதனால், கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதி, கரூர் உழவர் சந்தை மற்றும் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த, கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் மதியழகன், போலீசிடம் அனுமதி கேட்டு செப்., 25ல் மனு அளித்தார்.
ஆனால், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதி உள்ளிட்ட மூன்று இடங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதனால், விஜயின் பிரசாரத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த, த.வெ.க., மூத்த நிர்வாகிகள் முடிவு செய்து, கரூர் வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்தனர்.
அதன்படி, நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு, த.வெ.க., தலைவர் விஜய் பேசுவார் என, கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், காலை, 10:00 மணி முதல் கரூர் வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தொண்டர்கள் விஜயை காண வேண்டும் என்ற ஆவலில் குவிந்தனர். பலர் குடும்பத்துடன், குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
ஹோட்டல்கள் மூடல்
நேரமான நிலையில், மக்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியதால், அப்பகுதியில் காலையில் திறந்திருந்த டீக்கடை, ஹோட்டல்கள் பெரும்பாலும் மூடப்பட்டதால், விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் சரியான உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவித்தனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்து, கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையத்துக்கு, மாலை 4:00 மணிக்கு விஜய் வந்தார். நீண்ட வாகன அணிவகுப்பால்,தவிட்டுப்பாளையத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் உள்ள சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் நகரத்துக்குள் பிரியும் சர்வீஸ் சாலைக்கு, மாலை, 6:00 மணிக்கு வந்தடைந்த விஜய், பிரசார பஸ்சின் மேல்பகுதியில் நின்றபடி, அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தார்.
தொடர்ந்து வாகனம் சென்ற போது, திருகாம்புலியூர் பகுதியில் பிரசார பஸ்சுக்குள் சென்று விஜய் அமர்ந்துகொண்டார். இதனால், பல மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள், விஜயை பார்க்க முடியமால் ஏமாற்றமடைந்தனர். அவரை பார்ப்பதற்காக அங்கும், இங்கும் ஓடத்துவங்கினர்.
பஸ்சின் பின்னால் நெருக்கியடித்து வந்தனர். ஏற்கனவே, கரூர், வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பல மணி நேரமாக காத்திருந்தனர்.
திருகாம்புலியூர் பகுதியில் காத்திருந்த பொதுமக்கள், விஜயை பார்க்கும் ஆர்வத்தில் பிரசார பஸ்சை பின் தொடர்ந்தனர். இரவு, 7:00 மணிக்கு வேலுச்சாமிபுரம் வந்த விஜய் பேச முடிவு செய்த இடத்துக்கு சென்றடைந்தார்.
அப்போது, தொண்டர்கள் விஜயை பார்க்க முண்டியடித்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜய் பேச தொடங்கிய நிலையில், அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்த சிலர், கிளை உடைந்து கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மீது விழுந்தனர். அதில், சிலர் மயக்கம் அடைந்ததால், அவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.
அதில், த.வெ.க., கொடி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது பேசிக்கொண்டிருந்த விஜய், ஆம்புலன்சுக்கு வழிவிடும்படி கூறினார். நகரவே இடமில்லாத இடத்தில் ஆம்புலன்ஸ் புகுந்தவுடன் மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கிளை உடைந்தது
அப்போது, அடுத்தடுத்து தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள், 'தண்ணீர்... தண்ணீர்...' என, கூச்சலிட்டனர். இதனால், பிரசார பஸ்சில் பேசிக்கொண்டிருந்த விஜய், பஸ்சில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து மக்களிடையே வீசினார்.
அதைப்பிடிக்க பொதுமக்கள் போட்டி போட்ட போது, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதனால், ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகளும் சிக்கியதால் அவர்களின் அலரல் சத்தம் கேட்டது. உடன், அருகில் இருந்த போலீசார், மயங்கியவர்களை மீட்டு காற்றோட்டமான பகுதிக்கு கொண்டு சென்று படுக்க வைத்து தண்ணீர் கொடுத்தனர்.
அந்த நேரம், ஸ்பீக்கர் பாக்ஸ் கீழே விழுந்தது. விஜய் பேசிய மைக்கும் வேலை செய்யவில்லை. மயங்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, த.வெ.க., கொடி கட்டிய ஆம்புலன்ஸ் வேன் கூட்டத்துக்குள் சென்றது. அந்த வேனுக்கு விஜய் வழி விடும்படி தெரிவித்தார். இருப்பினும், விஜய் தொடர்ந்து சத்தமாக பேசிக்கொண்டிருந்தார். ஸ்பீக்கர் பாக்ஸ் அருகே மொபைல் போனில், விஜய் பேச்சை ரெக்கார்டு செய்ய காத்திருந்த பத்திரிகை நிருபர்களும் கீழே விழுந்தனர்.
பின், சுதாரித்து எழுந்த நிருபர்கள், உள்ளூர் தெருக்கள் தங்களுக்கு அத்துபடி என்பதால், வேலுச்சாமிபுரம் நான்காவது கிராஸ் தெருவுக்கு சென்று கூட்டத்தில் இருந்து தப்பினர். அவர்களுக்கு பின் ஆயிரக்கணக்கானோர் ஓடிவந்தனர்.
நிலைமை விபரீதமாக மாறியதை உணர்ந்த விஜய், பேச தொடங்கிய, 15வது நிமிடத்தில் பேச்சை முடித்த போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் வீசிய செருப்பு, விஜயின் பிரசார பஸ் மீது விழுந்தது. அதை அங்கு பஸ் மீது பாதுகாப்புக்கு நின்றிருந்த பவுன்சர்கள் தடுக்க முயன்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த திருமுருகன் பாத்திர கடை பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது. மக்கள் அலறல் சத்தம் கேட்க தொடங்கியது.
அங்கு மின்சார வசதிக்கு அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திருந்தனர். அதையும் இடித்து தள்ளிக்கொண்டு மக்கள் உள்ளே புகுந்தனர். நிலைமை எல்லை மீறி சென்றது. அந்த இடத்தில் பதற்றம் தொற்றியது. பலர் மயங்கி விழுந்தனர். விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆவலில், மயங்கி கிடந்தவர்கள் மீது ஏறி இறங்கி தொண்டர்கள் முண்டியடித்தபடி விஜய் பிரச்சார வாகனத்தை நெருங்கினர்.
இதனால், விஜய் இருந்த பிரசார வாகனத்தை, லட்சுமி நகர் மூன்றாவது கிராஸ் வழியாக, கோவை சாலைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின், திருச்சி சாலைக்கு சென்ற பிரசார பஸ்சில் இருந்து, கருப்பு நிற காரில் ஏறிய விஜய், திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
இந்நிலையில், த.வெ.க., கூட்டத்தில் மயங்கி விழுந்த, 100க்கும் மேற்பட்டவர்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, த.வெ.கா., தொண்டர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அங்கு மிங்கும் ஓடத்தொடங்கினர்.
சிக்கல் ஏற்படும் சூழல் உருவானதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மயங்கி கிடந்தவர்கள் பலரை கரூர் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன் பிறகே மருத்துவமனையில் இருந்து உயிரிழப்பு எண்ணிக்கை வெளிவர துவங்கியது.
இதுவரை 41 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் அறிவித்தனர்.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1