மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

27 புரட்டாசி 2025 சனி 10:44 | பார்வைகள் : 103
தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான், நிதி ஒதுக்குவோம் எனக் கூறி, எங்களை மத்திய அரசு மிரட்டி அடி பணிய வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், அந்த மாணவர்களின் கல்வி செலவுக்கான தொகையில், மாநில அரசு சார்பில் குறைவான தொகை மட்டுமே வழங்கப்படுகிறது என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், '2024- - 2025ம் ஆண்டு கல்வி கட்டணமாக நிர்ணயித்த தொகையை, 12 வாரங்களுக்கு செலுத்த வேண்டும். 2025- - 2026ம் கல்வி ஆண்டு செலவு தொகையை மறு நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கையை, மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்' என, கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ''கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 60 சதவீத நிதியை மத்திய அரசு தர வேண்டும். மீதமுள்ள 40 சதவீத தொகையை, மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே, மத்திய அரசின் நிதி வழங்கப்படும் என, மத்திய அரசு தெரிவிக்கிறது. ''ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு நிதியை விடுவிக்கவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், உத்தரவை எதிர்த்து, மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்பரா,'' என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெ.ரவீந்திரன், ''மத்திய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு, மாநில அரசு அடிபணியாது. இவ்விவகாரத்தில் உரிய பதிலை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார். இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்.24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1