வியட்நாமை நோக்கி நகரும் தென் சீனக்கடலில் உருவான 'ரகசா' புயல்

26 புரட்டாசி 2025 வெள்ளி 15:02 | பார்வைகள் : 189
தென் சீனக்கடலில் உருவான 'ரகசா' (Raksa) புயல், தாய்வானைப் புரட்டி எடுத்ததைத் தொடர்ந்து சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைத் தாக்கியதில், பெரும் பொருட்சேதங்களும், மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையைத் தாக்கியபோது, மணிக்கு 200 முதல் 230 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசியது. உச்சபட்சமாக மணிக்கு 265 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாகப் பதிவாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக அப்பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.
சேதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 இலட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
புயல் மற்றும் அதைத் தொடர்ந்த பலத்த கனமழையால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்காகப் பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்தப் புயல் வியட்நாமை நோக்கி நகர்ந்து செல்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.