தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க துடிக்கும் திமுக: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

26 புரட்டாசி 2025 வெள்ளி 06:30 | பார்வைகள் : 100
தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க திமுக அரசு துடிக்கிறது'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் திமுக அரசு, கவுரவ விரிவுரையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் 8,000 ஆக உயர்த்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
'பிச்சை புகினும் கற்கை நன்றே' எனக் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு போதித்த நமது தமிழகத்தின் கல்வியமைப்பை அனைத்து கோணங்களிலும், ஆளும் அரசு சிதைத்து விட்டது என்பதைத்தான் இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
உழைப்புச் சுரண்டலல்லவா?
காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதை விட்டுவிட்டு, கவுரவ விரிவுரையாளர்களின் எண்ணிக்கையை மட்டும் உயர்த்தி தற்காலிகமாகத் தப்பிக்கப் பார்க்கும் திமுக அரசின் அலட்சியத்தால் நமது பிள்ளைகளின் எதிர்காலம் பாழாக வேண்டுமா? அதிலும் UGC நிர்ணயித்தபடி ஊதியம் வழங்காமல் கவுரவ விரிவுரையாளர்களை இழுத்தடிக்கும் திமுக அரசு, மீண்டும் மீண்டும் அரசு கல்லூரிகளில் அவர்களைப் பணியமர்த்துவது ஏன்? இது மிகப்பெரும் உழைப்புச் சுரண்டலல்லவா?
தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க திமுக அரசு துடிக்கிறது. திமுக ஆட்சியில் குடிநீர், கழிவறை, தங்கும் விடுதி, உணவு, போதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், பஸ் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி செயலிழந்து கிடக்கும் அரசு கல்லூரிகளைப் போதிய பேராசிரியர்களின்றி முற்றிலுமாக முடக்கப் பார்க்கிறதா ஆளும் அரசு? இதனால் தான் மாணவர் சேர்க்கைக்கான கால அளவை பல மாதங்கள் நீட்டித்த பிறகும் கூட தமிழக மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விரும்புவதில்லை.
நிர்வாகத் தோல்வி
இது முதல்வர் ஸ்டாலினின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி. அரசு சேவைகளை நம்பியிருக்கும் அத்தனை பேரும் ஏழை, எளிய மக்கள் தானே என்ற இளக்காரத்தில் தங்கள் இஷ்டத்திற்கு படிக்கும் பிள்ளைகளையும் படித்த பட்டதாரிகளையும் ஆட்டிப் படைக்கும் திமுக அரசின், அராஜக நிர்வாகத்திற்குக் கூடிய விரைவில் நாம் முடிவு கட்ட வேண்டும். இல்லையேல் எஞ்சியிருக்கும் பெருமைகளையும் இழந்து நமது தமிழகம் நிர்கதியாகிவிடும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.