ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருக்க முடியாது: அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

25 புரட்டாசி 2025 வியாழன் 11:47 | பார்வைகள் : 101
வளரும் நாடுகள் ஒற்றை சந்தை அல்லது ஏற்றுமதியாளரை சார்ந்திருப்பதை குறைத்து தங்களது பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிவுறுத்தினார்.
ஐ.நா.,வின் 80வது பொது சபை கூட்டத்தில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதற்கிடையே ஒருமித்த கருத்து உடைய வளரும் நாடுகளின் தலைவர்களுடன் உயர்மட்ட கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது.
இதில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
உலகம் தற்போது மிகவும் அசாதாரண சூழலில் உள்ளது. குளோபல் சவுத் எனப்படும் வளரும் நாடுகளாகிய நாம், கொரோனா தொற்றுநோய், உக்ரைன் மற்றும் காசா போர்கள், வானிலை சீற்றங்கள் என பல சவால்களை எதிர்கொள்கிறோம்.
நிலையற்ற வர்த்தகம், நிச்சயமில்லாத முதலீடு, வட்டி விகித உயர்வுகள் ஆகியவை பொருளா தாரத்தில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன.
பல்நாட்டு ஒத்துழைப்பின் அடிப்படை கொள்கையே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. சர்வதேச அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன; நிதி பற்றாக்குறையால் செயலிழக்கின்றன.
சீர்திருத்தங்களை தாமதப்படுத்தியதற்கான விலை இன்று தெளிவாக தெரிகிறது. வளரும் நாடுகள் ஒன்றிணைந்து, சர்வதேச அமைப்பில் சமநிலையை கோர வேண்டும்.
பொருளாதார பாதுகாப்பிற்காக சுருக்கமான, நம்பகமான வினியோக சங்கிலிகள் அவசியம். ஒரே சந்தை அல்லது ஒரே ஏற்றுமதியாளரை சார்ந்து இருக்கக் கூடாது. உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பை பாதிக்கும் போர்களை உடனடியாக தீர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வெளியுறவு
அமைச்சர்களுடன்
சந்திப்பு
ஐ.நா., பொது சபை கூட்டத்திற்கு இடையே நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 13 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசினார்.