தி.மு.க., கூட்டணியில் காங்.,கை விட கூடுதல் சீட் பெற வி.சி., திட்டம்

25 புரட்டாசி 2025 வியாழன் 07:43 | பார்வைகள் : 147
தி.மு.க., கூட்டணியில் அதிக தொகுதிகளை பெறும் முயற்சியாக, 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலர்களை நியமிக்க, வி.சி., தலைவர் திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.
தி.மு.க., கூட்டணியில், முக்கிய கட்சியாக விடுதலை சிறுத்தைகள் உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்ட வி.சி., தற்போது தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலம் என, 15க்கும் மேற்பட்ட தொகுதிகளை பெற விரும்புகிறது.
'தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளில், காங்கிரசை விடவும் வி.சி., பெரிய கட்சி' என, வி.சி., துணை பொதுச்செயலர் வன்னி அரசு கூறுகிறார்.
இதனால், 'வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு அடுத்து, வி.சி.,க்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' என, வி.சி.க.,வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலர்களை நியமித்து, கட்சியை வலுப்படுத்தும் பணியில் வி.சி., தலைவர் திருமாவளவன் இறங்கியுள்ளார்.
இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறியதாவது:
வி.சி.,யில் தற்போது 144 மாவட்ட செயலர்கள் உள்ளனர். அனைத்து சட்டசபை தொகுதியிலும் கட்சி வளர்ந்துள்ளது.
எனவே, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலர் என, 234 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் பட்டியலை திருமாவளவன் வெளியிடுவார். அதன்பின், சட்டசபை வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தி, கட்சியின் செல்வாக்கு நிரூபிக்கப்படும்.
இதன் வாயிலாக, தி.மு.க., கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி வி.சி., என தெரியவரும். கூடவே, காங்கிரசை விட கூடுதல் இடங்களை கேட்டு பெறவும், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அவசரம் காட்ட விரும்பவில்லை
சென்னையில் வி.சி., தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி:
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு என்பது காலம் தாழ்ந்த முடிவாக இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. பேரணி, பொதுக் கூட்டம், மாநாடு என்றால், கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். த.வெ.க., தலைவர் விஜய்க்கு அரசோ, போலீசாரோ நெருக்கடி தருவதாக தெரியவில்லை.
தி.மு.க., எதிர்ப்பு என்பதை விட, தி.மு.க., வெறுப்பு அரசியலையே விஜய் பேசுகிறார். இந்த வெறுப்பு அரசியல், மக்கள் மத்தியில் எடுபடாது. அ.தி.மு.க., மக்கள் செல்வாக்கு உடைய கட்சி; தற்போது, சங் பரிவாரின் கட்டுப்பாட்டிற்குள் போய் விடுமோ என்ற ஐயம் எழுகிறது. தி.மு.க., கூட்டணியில், வி.சி.,க்கு அதிக இடங்களை பெறுவது குறித்து, தேர்தல் நேரத்தில் தெரிவிக்கப்படும். முன்கூட்டியே அவசரம் காட்ட விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.