தமிழகத்தில் 2ம் இடத்திற்குத் தான் போட்டி: விஜய்க்கு இபிஎஸ் பதில்

25 புரட்டாசி 2025 வியாழன் 06:46 | பார்வைகள் : 160
அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது என சமீபத்தில் தவெக, திமுக இடையே போட்டி என்று கூறி தவெக தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
நீலகிரியில் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது:
தமிழகத்தில் திறமையற்ற முதல்வர் ஆள்கிறார் என்பதால் எந்தத் திட்டமும் அவரால் கொண்டுவர முடியாது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் ரோல் மாடல் ஸ்டாலின். ஊழல், கலக்ஷன், கமிஷன், கரப்ஷனில் ரோல் மாடல் திமுக, டாஸ்மாக் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதில் ரோல்மாடல் திமுக,
குடும்ப ஆட்சி வாரிசு அரசியலில் ரோல் மாடல் திமுக, பொய் வாக்குறுதியிலும் ரோல் மாடல் திமுக. திமுக ஒரு குடும்பக் கட்சி. கருணாநிதி தலைவராக இருந்தார். இப்போது ஸ்டாலின் தலைவர், உதயநிதி இளைஞரணிச் செயலாளர், கனிமொழி மகளிரணி செயலாளர் மூன்று முக்கிய பதவிகளுமே கருணாநிதி குடும்பத்திலேயே இருக்கிறது.
8 கோடி மக்கள்
கருணாநிதி குடும்பம் இருக்கும்வரை வேறு எவரும் தலைமை பதவிக்கு வரமுடியாது. உழைக்கலாம், அந்த உழைப்பை உறிஞ்சுகின்ற குடும்பம் ஸ்டாலின் குடும்பம். நாட்டில் எத்தனையோ கட்சி இருக்கிறது, இப்படி குடும்ப ஆட்சி நடத்தும் கட்சி இருக்கிறதா? ஸ்டாலின் முதல்வர், உதயநிதி துணை முதல்வர், கனிமொழி மக்களவை குழு தலைவர், ஏன் அந்த கட்சியில் வேறு எம்பியே இல்லையா? எல்லாமே குடும்பத்தினர் தான். ஆட்சியிலும், கட்சியிலும் அதிகாரத்திலும் அவர்கள்தான் இருக்க முடியும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்கள் சுரண்டப்படுவதை நாம் அனுமதிக்கலாமா?
என்ன தவறு?
இதற்கெல்லாம் தேர்தல் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முடிவு கட்டுங்கள். அதிமுக பாஜவோடு கூட்டணி வைப்பதில் என்ன தவறு? இதுவே 1999 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக, பாஜவோடு கூட்டணி வைத்து மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் பாஜ நல்ல கட்சி.
அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சி, தீண்டத்தகாத கட்சியா? இது எந்த விதத்தில் நியாயம்? அதிமுக களத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்திற்குத்தான் போட்டி தமிழகத்தில் நடக்கிறது. இதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.