அ.தி.மு.க.,வில் ஏராளமான அணிகள்; துணை முதல்வர் உதயநிதி

24 புரட்டாசி 2025 புதன் 14:38 | பார்வைகள் : 103
அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, தீபா, தீபாவின் டிரைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அணி என பல அணிகள் உள்ளது என துணை முதல்வர் உதயநிதி கிண்டல் செய்துள்ளார்.
சாத்துாரில் நடந்த சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: தி.மு.க. கூட்டணி உடைந்து விடாதா என ஏங்கி தமிழகத்துக்கு எதிராக பல்வேறு சதி திட்டங்களை தீட்டி, பா.ஜ., செயல்படுத்தி வருகிறது.
இவற்றை முதல்வர் ஸ்டாலின், தனது இடது கையால் சமாளித்து வருகிறார். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 2021ல் பா.ஜ.,வின் அடிமை கட்சியிடம் இருந்து தமிழகத்தை மீட்டோம். 2026ல் மீண்டும் அடிமை கட்சியின் ஆட்சி ஏற்பட்டு விடக்கூடாது.
அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, தீபா, தீபாவின் டிரைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அணி என பல அணிகள் உள்ளது. சாத்துார் சட்டசபை தொகுதியில் கூட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஒரு அணி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தலைமையில் மற்றொரு அணி செயல்படுகிறது.
இரு நாட்களுக்கு முன், ஜெயலட்சுமி என்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என்றும், இனி அ.தி.மு.க., தனது கட்டுப்பாட்டில் என தெரிவித்தார். இவர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சென்று சந்தித்து வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.