அமெரிக்காவிற்கு இந்தியா மிகவும் முக்கியம்: ஜெய்சங்கரை சந்தித்த பிறகு மார்கோ ரூபியோ உறுதி

24 புரட்டாசி 2025 புதன் 04:38 | பார்வைகள் : 102
இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நம் நாட்டின் மீது 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை தான் நிறுத்தியதாக தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் இந்தாண்டு ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்பதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளார். நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க ஐ.நா., பொது சபை கூட்டத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை, அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, வர்த்தகம், வரி, விசா கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாகவும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இருவரும் பேசினர்.
சந்தித்ததில் மகிழ்ச்சி
இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவை சந்தித்ததில் மகிழ்ச்சி.
தற்போதைய கவலைக்குரிய பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். எங்களது உறவு தொடரும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மிகவும் முக்கியம்
இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.