Paristamil Navigation Paristamil advert login

வழிகாட்டி மதிப்பை 30 % உயர்த்தி வாங்குங்கள் சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு

வழிகாட்டி மதிப்பை 30 % உயர்த்தி வாங்குங்கள் சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு

23 புரட்டாசி 2025 செவ்வாய் 05:23 | பார்வைகள் : 148


அதிகாரப்பூர்வ அறிவிப்பின்றி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 30 சதவீதம் வரை, பதிவுத்துறை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நிலங்களுக்கு, 'சர்வே' எண் மற்றும் தெரு வாரியாக வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை நிர்ணயிக்கிறது. இந்த மதிப்புகள் அடிப்படையில், சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.

கடந்த, 2012ம் ஆண்டு தான் வழிகாட்டி மதிப்புகள், ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டன. அதன்பின், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

கடந்த 2023ல் நடைமுறையில் இருந்த வழிகாட்டி மதிப்பில், 10 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கான காரணமாக, வழிகாட்டி மதிப்புகளில் காணப்பட்ட வேறுபாடுகள் சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனால், 2012க்கு பின் வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தில், பதிவுத்துறை அதிகாரிகள் இருக்கின்றனர். அதே நேரம், வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்க, உயர்நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவுமின்றி, வழிகாட்டி மதிப்புகள், 30 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளன.

சமீபத்தில் நடந்த சீராய்வு கூட்டங்களில், புதிதாக பதிவுக்கு பத்திரங்கள் வரும் போது, வழிகாட்டி மதிப்பை 30 சதவீ தம் வரை உயர்த்தி, அதற்கு ஏற்ப முத்திரை தீர்வை, கட்டணங்களை வசூலியுங்கள் என, துறை அமைச்சர் மூர்த்தி வாய்மொழி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அமைச்சர் உத்தரவை, அறிவிப்பின்றி அமல்படுத்தும் போது, பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் என, சார் - பதிவாளர்கள் கூறுகின்றனர்.

பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:


நிலங்களின் சந்தை மதிப்பு வெகுவாக உயர்ந்து வரும் நிலையில், சிலர் தனிப்பட்ட தேவைகளுக்காக, வழிகாட்டி மதிப்பை விட, கூடுதல் மதிப்பில் பத்திரங்களை பதிகின்றனர். இதை ஆதாரமாக வைத்து, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்புகளை, 30 சதவீதம் வரை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மதிப்புகளை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், புதிதாக சொத்து பத்திரங்களை பதிவு செய்வோர், இணையதளத்தில் உள்ளதை விட கூடுதல் மதிப்பை, சார் - பதிவாளர் தெரிவிக்கும் போது அதிர்ச்சி அடைகின்றனர்.

சொத்துக்களின் சந்தை மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், வழிகாட்டி மதிப்புகள் உயர்வதை தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்