ஆசிய நாடொன்றை வெளிப்படையாக மிரட்டிய ட்ரம்ப்

21 புரட்டாசி 2025 ஞாயிறு 09:44 | பார்வைகள் : 170
ஆப்கானிஸ்தானின் தாலிபான் நிர்வாகம், பக்ராம் விமான தளத்தை திரும்ப ஒப்படைக்காவிட்டால், மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பக்ராம் விமான தளத்தை உருவாக்கிய அமெரிக்காவிடம் அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ட்ரம்ப், மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார்.
பிரித்தானியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அமெரிக்கா அந்தத் தளத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றும் யோசனையை அவர் எழுப்பிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய விமானத் தளமான பக்ராம், தாலிபானுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான போர் முயற்சியின் ஒரு முக்கிய மையமாக இருந்தது. 2001 செப்டம்பர் தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான் ஆரசாங்கத்தை அமெரிக்கா கவிழ்த்தது.
அதன் தொடர்ச்சியாக பாக்ராமில் அமெரிக்கப் படைகளால் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அம்னஸ்டி இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற அமைப்புகள் பலமுறை குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளன.
இந்த நிலையில், பக்ராம் தளம் கைவிட்டுப் போவது குறித்து ட்ரம்ப் அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளார். ஆனால் வியாழக்கிழமை முதல் முறையாக இந்த விவகாரத்தில் தாம் தீவிரமாக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பக்ராம் தளத்தை அமெரிக்கா மீண்டும் கைப்பற்ற முடிவு செய்துள்ளது என குறிப்பிட்ட ட்ரம்ப், மிக விரைவில் உரிய முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
முன்னதாக ஜோ பைடன் மத்தியஸ்தம் செய்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஜூலை 2021ல் அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் குழப்பமான சூழலில் பக்ராமில் இருந்து வெளியேறின.
மீண்டும் எழுச்சி பெற்ற தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியைக் கைப்பற்றி, இறுதியாக முழு நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர்.
ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பக்ராம் தளத்தின் இழப்பை பலமுறை விமர்சித்துள்ளார், அத்துடன், ஆப்கானிஸ்தானில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும் ட்ரம்ப் தமது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.