நேபாளத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் அரசுக்கு எதிராக வெடிக்க உள்ள போராட்டம்

20 புரட்டாசி 2025 சனி 17:51 | பார்வைகள் : 170
பிலிப்பைன்ஸிலும் Nepo குழந்தைகளுக்கு எதிரான கோபம் அதிகரித்து, ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக இளம் தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்ட பிறகும், அங்குள்ள ஊழல் குற்றச்சாட்டியில் சிக்கியுள்ள அரசியவாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை மீதான பொதுமக்களின் கோபம் போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில், 51 பேர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் பல அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
நேபாள அரசின் இடைக்கால பிரதமராக, முன்னாள் நீதிபதி சுசிலா கார்க்கி பதவி ஏற்றுள்ளார்.
மற்றொரு தெற்காசிய நாடான பிலிப்பைன்ஸில் அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கு எதிரான போராட்டம் வெடிக்க உள்ள சூழல் நிலவி வருகிறது.
பிலிப்பைன்ஸில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், நாட்டின் பெரும்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இந்த வெள்ளத்தில் பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
வெள்ள கட்டுப்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 70 சதவீத நிதியில் ஊழல் செய்யப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் பொருளாதார திட்டமிடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் ஏற்பட்ட ஊழல் காரணமாக, 2023 முதல் 2025 வரை ஆண்டுக்கு சராசரியாக 2.1 பில்லியன் டொலர் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என செப்டம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற செனட் விசாரணையில் நிதிச் செயலாளர் ரால்ப் ரெக்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அரசியவாதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குழந்தைகளின் ஆடம்பர வாழ்க்கை வீடியோக்கள் பொதுமக்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.
nepo babies என்ற ஹேஸ்டேக், பிலிப்பைன்ஸ் சமூகவலைத்தளங்களில் பிரபலமடைந்துள்ளது.
இதனையடுத்து, செப்டம்பர் 21 ஆம் திகதி ஊழலுக்கு எதிரான பெரிய போராட்டத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், சுமார் 100 அமைப்புகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான் ஜனாதிபதியாக இல்லாவிட்டால், அவர்களுடன் வீதிகளில் இறங்கியிருப்பேன் என ஜனாதிபதி மார்கோஸ் இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மணிலாவில் உள்ள முக்கிய பொதுக்கூட்ட தளமான லுனெட்டாவில் நடைபெறும் பேரணியில், சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.