ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய அனைத்து புத்தங்களுக்கும் தடை

19 புரட்டாசி 2025 வெள்ளி 18:35 | பார்வைகள் : 291
பெண்கள் எழுதிய அனைத்து புத்தங்களையும் பல்கலைகழகங்களில் தடை செய்வதாக ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், பெண்கள் மீது பல்வேறு அடக்குமுறை சட்டங்களை விதித்துள்ளனர்.
ஏற்கனவே அங்கு பெண்கள் வேலைக்கு செல்ல கூடாது, பெண்கள் 6 ஆம் வகுப்புக்கு மேல் கல்வி பயில கூடாது, பெண்கள் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்ல கூடாது என பல்வேறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய கல்விச்சட்டத்தின் கீழ், இஸ்லாமிய ஷரியா சட்டங்கள் மற்றும் தாலிபான் கொள்கைகளுக்கு எதிரானது என கூறி பெண்கள் எழுதிய அனைத்து புத்தங்களையும் பல்கலைகழக பாடத்திட்டத்தில் தடை செய்வதாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
இதில் பெண்கள் எழுதிய சுமார் 140 புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், பாலினம் மற்றும் வளர்ச்சி, தகவல் தொடர்பில் பெண்களின் பங்கு, பெண்களுக்கான சமூகவியல் உள்ளிட்ட 6 பெண்களுக்கான பாடங்கள் உள்ளடக்கிய 18 பாடங்களை பல்கலைகழகங்களில் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
மத அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், தடைசெய்யப்பட்ட புத்தகங்களுக்கு பதிலாக இஸ்லாமுடன் முரண்படாத பாடப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் துணை கல்வி அமைச்சர் பல்கலைகழகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபவதை தடுக்க, வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை விதித்துள்ளது.
மொபைல் இணைய சேவை தவிர்த்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வீடுகளில் வைஃபை இணைய இணைப்பை துண்டித்துள்ளது.
சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில், தந்தை, கணவர், உடன்பிறந்த சகோதரர்களை தவிர மற்றவர்கள் பெண்களை தொட தடை விதிக்கப்பட்டுள்ளதால், நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கிய பெண்களை மீட்பதில் சிக்கல் நிலவியது.