பருவகால மாற்றங்களின் போது நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது..?

19 ஐப்பசி 2025 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 225
ஒருபக்கம் வானிலை வேகமாக மாறி வருகிறது. இன்னொரு பக்கம் குறைந்து வரும் வெப்பநிலை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்புகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. அதோடு பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் பரவுகின்றன. பருவகால மாற்றங்களின் போது மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த மாற்றங்கள் உடலின் இயற்கையான பாதுகாப்புகளை பலவீனப்படுத்தி, தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு ஆளாகக்கூடியதாக மாற்றுகின்றன. இதற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் நம் உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். பருவகால மாற்றங்களின் போது, தனிநபர்கள் பெரும்பாலும் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி அல்லது சோர்வு போன்றவற்றை அனுபவிக்கின்றனர்.
இதற்கு முதன்மையான காரணம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி. திடீர் வெப்பநிலை மாற்றங்கள் உடலின் உள் சமநிலையை சீர்குலைத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
வெப்பநிலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உடல் கூடுதல் சக்தியை செலவிடுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் அழுத்தம் கொள்ள வைக்கிறது. மேலும் இந்த சமயங்களில் காற்றில் அதிகரிக்கும் பூஞ்சை, வைரஸ்கள் மற்றும் ஒவ்வாமை போன்ற காரணிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை குழப்பி, அதன் செயல்பாட்டை பாதிக்கலாம்.
குளிர்ந்த காற்று மற்றும் குறைந்த வெப்பநிலை, உடலுக்கு கேடயங்களாகச் செயல்படும் முக்கிய உறுப்புகளான நுரையீரல், தொண்டை மற்றும் தோலின் மேல் அடுக்குகளை பலவீனப்படுத்துகிறது என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. இந்தப் பாதுகாப்பு அடுக்குகள் சேதமடையும் போது, வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் எளிதில் நுழையும். உடல் வெப்பநிலையில் வெறும் 1°C குறைவு கூட, நோய் எதிர்ப்பு சக்தியை ஐந்து அல்லது ஆறு மடங்கு வரை குறைக்கும்.
பருவகால மாற்றங்கள் தினசரி வழக்கங்களை சீர்குலைத்து, போதுமான ஓய்வு மற்றும் அதிகரித்த மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. இது கார்டிசோல் மற்றும் பிற ஹார்மோன் அளவுகளை மாற்றி, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் அழுத்துகிறது. இதன் காரணமாக உடலின் இயற்கையான பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது.
இப்படி மாறிவரும் பருவங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குளிர்காலத்தில் சூடான உணவுகளை உட்கொள்வதும் நீர்ச்சத்தோடு இருப்பதும் மிக முக்கியம். ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த உணவுகளான எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் சிட்ரஸ் பழங்களை அவசியம் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சுமார் 30-60 நிமிடங்கள் வழக்கமான உடற்பயிற்சி செய்வது, நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு இரவும் 7-8 மணிநேர தரமான தூக்கத்தை உறுதிசெய்து, மன அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்கவும். ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், சுய சிகிச்சையில் ஈடுபடாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.