எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் நிலை ஒழியுமா? : சீமான்

19 ஐப்பசி 2025 ஞாயிறு 15:41 | பார்வைகள் : 105
இளைய தலைமுறையினர் மாற்றி ஓட்டளிக்க முன்வந்தால், பொய் திராவிடம் பேசுவோர் வீழ்வர்,'' என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சேலத்தில் அவர் அளித்த பேட்டி:
கூட்டணி சார்பில், 40 பார்லிமென்ட் உறுப்பினர்களை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
உண்மையிலேயே அந்த பிரச்னையை தீர்க்கும் அக்கறை இருந்தால், 40 பார்லிமென்ட் உறுப்பினர்களை வைத்து பார்லிமென்ட்டை முடக்கி, பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்ய மாட்டார். நாடகம் நடத்துவதுதான் அவருடைய வாடிக்கை.
'ஆப்பரேஷன் சிந்துார்' போரை ஆதரித்து, தமிழகத்தில் பேரணி சென்ற ஸ்டாலின், காவிரி நீர் வேண்டி, ஒரு பெரிய பேரணி நடத்தியிருக்கலாம். அப்படி நடத்தி இருந்தால் கூட, அப்பிரச்னை மீது எல்லாருடைய கவனமும் ஈர்க்கப் பட்டிருக்கும்.
பொய்யான வாதம் வார்த்தைக்கு வார்த்தை திரா விடம், திராவிட மாடல் ஆட்சி என்று பந்தா பண்ணிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், முதலில் திராவிடம் என்றால் என்ன என்று விளக்கம் சொல்ல வேண்டும்.
'ஏற்கனவே அடிச்ச அடில தான், தமிழகத்தில் சீர்திருத்தக் கல்யாணங்கள் நடக்கிறது; அது தான் திராவிடம்' என பொய்யான வாதம் பேசுவதே பிழைப்பாய் போய்விட்டது.
திராவிடத்துக்கு நான் சொல்கிறேன் விளக்கம். திராவிடம் என்றால் தமிழர் அல்லாதோர், வசதியாகவும் பாதுகாப்பாகவும், தமிழகத்தை ஆள்வதற்கும் வாழ்வதற்கும் கொண்டு வரப்பட்டது.
இதை இல்லை என்று மறுக்கவோ, எதிர்க்கவோ முடியுமா? தமிழக மக்கள் அரசியல் தெளிவு பெற்று ஓட்டளிக்க வேண்டும். அதுவரை, திராவிட கதைகளை சொல்லிக்கொண்டு தான் இருப்பர். வெகு காலத்துக்கு திராவிடத்தைச் சொல்லி, தமிழகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. இளம் தலைமுறையினர் அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர்.
அவர்கள் மாற்றி ஓட்டளிக்க முன்வந்தால், பொய் திராவிடம் பேசுவோர் நிச்சயம் வீழ்வர்.
ஜாதி ஆணவ படுகொலையை தடுக்கவும், சட்டம் இயற்றவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதாக, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. இதுவரை, 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜாதிய கொடுமை நாளுக்கு நாள் குழுக்கள் எண்ணிக்கைதான் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர, எதுவும் உருப்படியாக நடக்கவில்லை. எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் போக்கு என்று ஒழியும் என தெரியவில்லை. இந்த நுாற்றாண்டிலும் ஜாதிய கொடுமை உள்ளது வேதனையான விஷயம்.
ஆந்திர காட்டிற்கு வறுமைக்காக, தமிழகத்தைச் சேர்ந்தோர் செம்மரம் வெட்டச் செல்கின்றனர். சட்ட ரீதியில் அது தவறுதான். செம்மரம் வெட்டச் சென்றவர்களை, கைது செய்து சிறைப்படுத்தலாம்.
ஆனால், அவர்களை சுட்டு, மரத்தோடு மரமாக சடலமாகப் போடுகின்றனர். ஆனால், மரம் வெட்ட தமிழர்களை ஆந்திராவுக்கு அனுப்பும் ஏஜென்ட்கள் மீது ஒரு நாளும் நடவடிக்கை இல்லை.
விருத்தாசலம் அருகே விவசாய தோட்டத்தில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி, ஐந்து பேர் பலியாகினர். அவர்கள் குடும்பத்தினரை எந்த அரசியல் கட்சித் தலைவர்களாவது சென்று பார்த்தனரா? அவர்களுக்கு ஏன் ஆறுதல் சொல்லி நிதி அளிக்கவில்லை.
இப்படிப்பட்டவர்களுக்குத்தான், அப்பாவிகள் ஓட்டுப் போடுகின்றனர். ஆனால், அவர்களுக்கு இந்தக் கட்சித் தலைவர்கள் வாய்க்கரிசிதான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.