ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் - 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் பலி

18 ஐப்பசி 2025 சனி 07:36 | பார்வைகள் : 210
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் (Paktika province) பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை (17) வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலில் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் கபீர், சிக்பத்துல்லா மற்றும் ஹாரூன் என்ற மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவர்.
பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த வீரர்கள், பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியான உர்குனில் இருந்து ஷரானாவுக்கு நட்புறவுப் போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்தனர். உர்குனுக்குத் திரும்பிய பின்னர், ஒரு பொதுக்கூட்டத்தின்போது அவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இந்தத் தாக்குதலைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"பாகிஸ்தான் ஆட்சியால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில், பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் வீரர்களின் துயர மரணம் குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும் துக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பலியானவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்புத் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகுவதாக அறிவித்தது.
இது குறித்து ஆப்கானிஸ்தான் இருபதுக்கு -20 அணித் தலைவர் ரஷீட் கான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில்,
"பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் உயிர்களை இழந்தது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. இது பெண்கள், குழந்தைகள் மற்றும் உலக அரங்கில் தங்கள் நாட்டைக் கடந்து செல்ல கனவு கண்ட இளம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை சோகத்தில் நிறைவடைந்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல் முற்றிலும் காட்டுமிராண்டித்தனம். இத்தகைய நியாயமற்ற மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளின் கடுமையான மீறலாகும்" என்று கூறி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் முடிவை வரவேற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர் முகமது நபி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
"இந்தச் சம்பவம் பக்டிகாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குடும்பத்திற்கும் தேசத்திற்கும் ஒரு துயரம்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர் ஃபசல்ஹக் ஃபாரூக்கி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்த ஒடுக்குமுறையாளர்களால் அப்பாவி பொதுமக்கள் மற்றும் எங்கள் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டது ஒரு கொடுமையான, மன்னிக்க முடியாத குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.
எல்லையில் நிலவிய கடுமையான மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையில் 48 மணி நேர யுத்த நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்துவதாக காபூல் குற்றம் சாட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தைத் தணிக்க தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடியும் வரை சண்டை நிறுத்தத்தை நீட்டிக்க காபூல் ஒப்புக்கொண்டுள்ளது.