நக்சல் ஆதிக்கம் இல்லாத இந்தியா; பிரதமர் மோடி உறுதி

18 ஐப்பசி 2025 சனி 06:05 | பார்வைகள் : 149
நக்சல்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர். அவர்களின் ஆதிக்கம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்,'' என பிரதமர் மோடி கூறினார்.
மக்கள் முன்னேற்றம்
டில்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்தியாவை யாரும் தடுக்க முடியாது. இந்தியா நிற்கும் எண்ணத்தில் இல்லை.பல சவால்களில் இருந்து இந்தியா மீண்டுள்ளது. 140 கோடி இந்தியர்களும் முன்னேறி செல்கின்றனர். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது. 2014க்கு முன்பு உலகளாவிய சவால்களை இந்தியா எப்படி எதிர்கொள்ளும் என்ற விவாதம் இருந்தது. அதனை ஊழல் தடுக்கும் போது, பெண்கள் பாதுகாப்பு குறித்த பிரச்னையும் இருந்தது. பயங்கரவாத ஸ்லீப்பர் செல்கள் குறித்த உண்மைகளும் அம்பலமானது.
இந்த பிரச்னைகளில் இருந்து இந்தியா வெளியே வராது என மக்கள் நம்பத்துவங்கினர். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் இந்தத் தடைகளை இந்தியா தகர்த்தெறிந்துள்ளது. மோசமான பொருளாதாரத்தில் இருந்து உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. பணவீக்கம் 2 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. இந்தியா 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய வணிகம் முதல் பெரிய வணிகம் வரை இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் நம்பிக்கையுடனும் உள்ளது.
வேகமாக வளரும் நாடு
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு சர்ஜிக்கல் தாக்குதல், விமானப்படை தாக்குதல் மற்றும் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பாராட்டுகின்றன. பயங்கரவாதத்தை இந்தியா பொறுமையாக தாங்கிக் கொள்ளாது. கடந்த 3 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இது எதிர்பாராதது. கணிக்க முடியாத வகையில் உள்ளது. கோவிட் காலத்தில் சவால்களை எதிர்த்து போராடி, இன்று உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் வர்த்தக குழுவுடன் இந்தியா வந்தார். இது இந்தியாவை உலக நாடுகள் நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதை காட்டுகிறது. நம்பகமான பொறுப்பான கூட்டாளியாக இந்தியாவை அவை பார்க்கின்றன. உலகத்துக்கான வாய்ப்புகளை இந்தியாவின் வளர்ச்சி கட்டமைக்கிறது.
வராக்கடன்
டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது. இன்று உலகின் 50 சதவீத டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது. சர்வதேச நிதியத்தின் அழுத்தம் காரணமாக காங்கிரஸ் சீர்திருத்தம் செய்தது.
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சி காலத்தில் ஏழைகளை சென்றடையும் எனக்கூறி வங்கித் துறைகள் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆனால், உண்மையில் வங்கிகள் ஏழைகளிடம் இருந்து தள்ளி நின்றன.2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேருக்கு வங்கிக்கணக்கு இல்லை. நாங்கள் வங்கி அமைப்பை சீரமைத்ததுடன் 50 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகளை திறந்துள்ளோம்.மலையளவு வராக்கடன்களை காங்கிரஸ் பராமரித்து வந்தது.
மானியங்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை பெட்ரோல் பங்குகளை மூட காங்கிரஸ் முயற்சித்தது. ஆனால், இன்று 24 மணி நேரத்தில் பெட்ரோல் பங்குகளை திறக்க முடியும். பிஎஸ்என்எல் அமைப்பை அழிப்பதற்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிட்டது இல்லை. ஆனால், இன்று பிஎஸ்என்எல் புதிய உயரத்தை அடைந்துள்ளது.
டேட்டா விலை குறைவு
செங்கோட்டையில் இருந்து காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஏழைகள் குறித்து பேசிய பேச்சை கவனிக்க வேண்டும். ஆனால், அவர்களால் வறுமையை போக்கவில்லை . ஆனால் இன்று ஏழைகளுக்காக அர்ப்பணிப்பான அரசு அமைந்துள்ளது. சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு நாங்கள் கைதூக்கி விடுகிறோம். மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே எங்களின் இலக்கு. நேர்மறையாக வரி செலுத்துவோர் கவுரவிக்கப்படுகின்றனர். 2015 ல் 1ஜிபி டேட்டா ரூ.300க்கு விற்பனை ஆனது. ஆனால், இன்று ரூ.10க்கு கிடைக்கிறது. வரி செலுத்துவோருக்கான பலன்களை நாங்கள் கொடுக்கிறோம். ரூ.12 லட்சம் வரை வருமானம் கொண்டவர்களுக்கு வரி இல்லை. இந்த சலுகை மற்றும் ஜிஎஸ்டி சீரமைப்பு மூலம் மக்கள் ரூ.2.5 லட்சம் கோடி பணம் சேமிக்க முடியும்.எல்ஐசி,எஸ்பிஐ, பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்தில் புதிய சாதனைகள் படைக்கின்றன.
சரண்
2014 ல் 125 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்களை தற்போது 11 மாவட்டங்களாக குறைத்துள்ளோம். முன்பு, பஸ்தரில் வாகனங்கள் எரிப்பு, பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர் என்ற செய்தி வரும். ஆனால், இன்று இளைஞர்கள் பஸ்தர் ஒலிம்பிக்கை நடத்துகின்றனர். இது மிகப்பெரிய மாற்றம். நக்சல்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர். இதற்கான விலையை ஆதிவாசி மக்கள் கொடுத்தனர். கடந்த 75 மணி நேரத்தில் 300க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர். விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்