இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்க வரிவிதிப்பு தடையாக இருக்காது; ஆர்பிஐ கவர்னர்

16 ஐப்பசி 2025 வியாழன் 13:35 | பார்வைகள் : 137
இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை பெரிய தடையாக இருக்காது என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; உலகப் பொருளாதாரத்தில் பல சவால்கள் இருந்தும், இந்தியா கடந்த ஆண்டு 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியா பெரும்பாலும் உள்நாட்டு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.
எனவே, வெளிநாட்டு (அமெரிக்கா) வரிவிதிப்பு நடவடிக்கைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச வர்த்தகம் சீர்குலைந்ததுடன், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதித்துள்ளது.
கொரோனா மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டு வந்துள்ளோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். 8 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைத்திருப்பது, 8 ஆண்டுகளில் இல்லாத ஒன்று. மத்திய அரசு மற்றும் நிதிக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்படுவது தான் இந்த நிலைக்கு காரணமாக இருக்கிறது.
அதேபோல, அமெரிக்க டாலருக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பு, மற்ற நாடுகளின் கரன்சியைப் போல் அதிகம் மதிப்பிழக்கவில்லை, இவ்வாறு அவர் கூறினார்.