இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி

15 ஐப்பசி 2025 புதன் 17:40 | பார்வைகள் : 240
சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர்.
ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக அவர்கள் இவ்வாறு சென்றிருந்தனர்.
நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தற்போது பொலிஸ் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியும் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது ‘கணேமுல்ல சஞ்சீவ’ கடந்த பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றிருந்த நிலையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை கெஹெல்பத்தர பத்மேவின் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.