‘டியூட்’ திரைப்படம் எப்படியிருக்கும்?

14 ஐப்பசி 2025 செவ்வாய் 12:29 | பார்வைகள் : 157
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன், "எல்லோரைப் போலவும் நானும் உதவி இயக்குநராக, இயக்குநர் சுதா கொங்கராவிடம் 7 வருடங்கள் பணிபுரிந்தேன். 'டியூட்' படத்தின் கதை எழுதி முடித்ததும் நண்பரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் நிகேத் பொம்மியிடம் கதை சொன்னேன். அவர் பயங்கரமாக என்ஜாய் செய்துவிட்டு மைத்ரியிடம் பேசுவதாக சொன்னார். ஆனால், அப்போது கூட படம் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. பிறகு ஹைதராபாத்தில் தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொன்னதும் உடனே அவர்களுக்கு பிடித்து விட்டது.
படத்தில் 'ஊரும் பிளட்டும்' பாடல் உருவாவதற்கு முன்பு நமக்கு பிடித்தது போல செய்யலாம். இப்போதுள்ள டிரெண்டுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் யோசித்தோம். ஆனால், பாடல் வெளியானதும் மக்கள் எல்லோருக்கும் பிடித்து போய் சென்சேஷன் ஆகிவிட்டது.
பழைய சரத் சாராக ஆடல் பாடலுடன் இந்த படத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து தான் கதை சொன்னேன். அவருக்கும் பிடித்து விட்டது. மமிதாவுக்கும் நன்றி. 'பிரேமலு', 'சூப்பர் சரண்யா'வில் என்ன செய்தாரோ அதுவும் இந்த படத்தில் இருக்கும். அதை தாண்டி நிறைய எமோஷனாகவும் நடித்துள்ளார் மமிதா. படத்தில் உங்களுக்கு எல்லோருக்கும் பிடித்த பயங்கர ஹைப்பரான பிரதீப்பையும் பார்ப்பீர்கள்.
இன்னொரு பக்கம் மெச்சூர்டான, எமோஷனலான இன்னொரு வெர்ஷன் பிரதீப்பையும் பார்ப்பீர்கள். என்னுடைய முதல் படத்திலேயே நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே கொண்டு வர சப்போர்ட் செய்த பிரதீப் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. திரையரங்கில் பார்த்து கொண்டாடும் படியாக லவ், ஆக்சன், எமோஷன், ஹியூமர் என எல்லாமே இந்த படத்தில் இருக்கும்" என்றார்.