மெக்சிகோவில் கொட்டித்தீர்க்கும் மழை - நாடு முழுவதும் வெள்ளக்காடு

11 ஐப்பசி 2025 சனி 07:38 | பார்வைகள் : 173
மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் கனமழையால், நாடு முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன, நிலச்சரிவுகள் மலைப் பகுதிகளைச் சிதைத்துள்ளன. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, இந்த கோரமான மழையிலும், வெள்ளத்திலும் சிக்கி கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வீடுகள், பாலங்கள், விவசாய நிலங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மலைகளைப் பிளக்கும் நிலச்சரிவுகள், குடியிருப்புகளை மண்ணோடு மண்ணாகப் புதைத்துள்ளன.
பல கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், மீட்புப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. ஓக்ஸாகா (Oaxaca) மாகாணத்தில் ஒரு குழந்தைகள் மருத்துவமனையையும் வெள்ளம் சூழ்ந்ததால், உள்ளே இருந்த 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மெக்சிகோவின் பெரும்பாலான பகுதிகளில் 11-10-2025 இன்றும் பேய் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இடி மின்னலுடன் கூடிய புயல் காற்று, மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், வெள்ளம் மேலும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.