பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நிலநடுக்கம்- பதற்றத்தில் மக்கள்

10 ஐப்பசி 2025 வெள்ளி 09:48 | பார்வைகள் : 203
பிலிப்பைன்ஸ் நாட்டில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறிது நேரத்தில் சுனாமி தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு மக்களிடையே பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
10-10-2025 வெள்ளிக்கிழமை அதிகாலை 7.13 மணியளவில், பிலிப்பைன்ஸ் நாட்டை பாரிய நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் அது 7.4 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் பதறியடித்து கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ள நிலையில், மற்றொரு மோசமான செய்தி வந்துள்ளது.
இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி அலைகள் எழக்கூடும் என்றும், அவை 10 அடி உயரம் வரை இருக்கலாம் என்றும் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள்.
ஏற்கனவே கடந்த வாரம், அதாவது, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று பிலிப்பைன்சை தாக்கியதில் 74 பேர் வரை உயிரிழந்தார்கள்.
மக்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு முன் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பிலிப்பைன்சை தாக்கியுள்ளது கவலையை உருவாக்கியுள்ளது.