Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது ஏவுகணைகளை மழையாக பொழிந்த ரஷ்யா...

உக்ரைன் மீது ஏவுகணைகளை மழையாக பொழிந்த ரஷ்யா...

5 ஐப்பசி 2025 ஞாயிறு 15:37 | பார்வைகள் : 218


உக்ரைன் மீது உக்கிரமனாத் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்த நிலையில், போர் விமானங்களுடன் நேட்டோ உறுப்பு நாடான போலந்து தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலந்து எல்லைக்கு அருகிலுள்ள லிவிவ் பகுதியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ரஷ்யா மழை போல பொழிவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், போலந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் விமானங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், போலந்து வான்வெளியில் இயக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் தரைவழி வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கண்காணிப்பு அமைப்புகள் அனைத்தும் தீவிர தயார்நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக போலந்து தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.


செப்டம்பரில் போலந்து தனது வான்வெளியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதை அடுத்து, கிழக்குப் பக்க நேட்டோ உறுப்பு நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்.

மட்டுமின்றி, கோபன்ஹேகன் மற்றும் மியூனிக் விமான நிலையங்கள் மீது ட்ரோன் மற்றும் வான் ஊடுருவல்கள் ஐரோப்பிய விமானப் போக்குவரத்தில் குழப்பத்திற்கு வழிவகுத்துள்ளன.

இதனிடையே, சனிக்கிழமை இரவு விமான நிலையத்தை நோக்கி பலூன்கள் பறக்க விடப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, லிதுவேனியாவின் வில்னியஸ் விமான நிலையம் இரவு முழுவதும் பல மணி நேரம் மூடப்பட்டது.

மேலும், வணிக விமானங்கள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வழித்தடமான போலந்தின் லுப்ளின் மற்றும் உக்ரைன் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ரெஸ்ஸோவ் விமான நிலையங்கள் மூடப்பட்டன.


உக்ரைன் முழுவதும் பல மணி நேரம் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் இரவு முழுவதும் அமுலில் இருந்தன, உக்ரைனின் விமானப்படை லிவிவ் பிராந்தியத்திற்கு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் குறித்து மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தது.

இதனிடையே, Zaporizhzhia பிராந்தியத்தின் தலைநகரான Zaporizhzhia மீது நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 9 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியானது.


மேலும், தென்கிழக்கு பிராந்தியத்தில் 73,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் ரஷ்யா தரப்பில் இருந்து அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்