இலங்கையின் பாதாள குழு கும்பல் வெளிநாட்டில் அதிரடியாக கைது!

28 ஆவணி 2025 வியாழன் 18:19 | பார்வைகள் : 207
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள், இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி ஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் இருந்த பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று வயது குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவா என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கெஹல்பத்தர பத்மே மீது குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணையில் குற்ற கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவாவை கொலை செய்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியிருந்தார்.
மேலும், கெஹெல்பத்தர பத்மே உள்ளிட் இந்தக் குழு மீது பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற பின்னணியில், கெஹெல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான பாதாள உலகக் குழு கும்பல்களைச் சேர்ந்த பலர் கடந்த காலங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ‘பஸ் தேவா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நாட்டில் நடத்தி வரும் வலஸ் கட்டா என்ற திலின சம்பத்தும் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கஜ்ஜா என்ற அனுர விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.