Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு வரும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு வரும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை

28 ஆவணி 2025 வியாழன் 11:12 | பார்வைகள் : 167


அமெரிக்கவின், 50 சதவீத வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பு தற்காலிகமானது; அமெரிக்க மக்கள் அதிருப்தியில் இருப்பதால், அடுத்த நான்கு வாரத்துக்குள் சுமுக தீர்வு கிடைக்கும் என, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், 1.35 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நடந்தது. அதில், அமெரிக்காவுக்கு மட்டும் 45 ஆயிரத்து, 170 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது, நடப்பாண்டில் மேலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அமெரிக்காவில், இந்திய பொருட்களுக்கு, 16.50 சதவீதம் இறக்குமதி வரியும், 10 சதவீதம் கூடுதல் வரியும் (டெரிப்) விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம், கூடுதல் வரி, 25 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இரண்டாம் நிலை வரியாக, 25 சதவீதம் அறிவிக்கப்பட்டு, நேற்று முதல், வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு எதிர்பார்ப்பால், ஏற்றுமதியாளர்கள் ஆர்டர் ஒப்பந்தம் செய்வதில் யோசனை செய்தனர். பெரிய நிறுவனங்கள் மட்டும், வழக்கம் போல் ஒப்பந்தம் செய்தன; அதுவும், மே - ஜூன் மாதத்துக்கு பிறகு புதிய ஆர்டர் ஒப்பந்தம் அதிகம் நடக்கவில்லை.

கூடுதலாக, 25 சதவீதம் வரி விதிக்கப்படுவது உறுதியானதும், ஒப்பந்தம் செய்த ஆர்டர்களையும் நிறுத்தி வைக்க, அந்நாட்டு வர்த்தகர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், நுால் கொள்முதல் செய்து ஆடை உற்பத்தியை துவக்கிய ஏற்றுமதி நிறுவனங்கள், தொழிலாளர் நலன்கருதி, பணியை தொடர்ந்து வருகின்றன.

அமெரிக்க ஆர்டர்கள் நிறுத்தப்பட்டால், நாடு முழுவதும், தொழிலாளர் தற்காலிகமாக வேலை இழக்க வேண்டியிருக்கும் என்ற சவாலும் எழுந்துள்ளது. அரசு சிறப்பு திட்டத்தின் வாயிலாக, இப்பிரச்னைகளை தவிர்க்கலாம்.

அடுத்த சீசனில், பேச்சுவார்த்தை வாயிலாக புதிய விலை நிர்ணயம் செய்து, ஏற்றுமதியை தொடர முடியும். வரி உயர்வால், 25 சதவீத வர்த்தக இழப்பு வந்தாலும், மற்ற நாடுகளில் இருந்து ஆர்டர் பெற்று சரிக்கட்ட முடியும்.

அமெரிக்க மக்களும், விலை உயர்வால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அபரிமிதமான வரி உயர்வு பிரச்னை வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

4 வாரத்தில் பிரச்னை தீரும்

சக்திவேல், துணை தலைவர், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்:

உற்பத்தியான ஆடைகள், பத்திரமாக சென்று விட்டன; கைவசம் உள்ள ஆர்டர்களை எப்படி அனுப்புவது என்று குழப்பம் உள்ளது. வரி உயர்வை பகிர்ந்து கொள்ளலாம் என, வர்த்தகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசும், பருத்தி இறக்குமதி வரி ரத்து, ராணுவம் தொடர்பான ஆர்டர் கொடுத்தது என, அமெரிக்காவுடன் சுமுகமான நடவடிக்கையை துவக்கியுள்ளது.


கடந்த வாரம், 'மேஜிக் பேர்' கண்காட்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தோம்; அந்நாட்டு மக்கள், 'டேரிப்' உயர்வால் எங்களுக்கத்தான் பாதிப்பு என்கின்றனர். திருப்பூரின் பசுமை ஆடைகளை பெரிதும் விரும்பும் அவர்கள், வரி உயர்வால், ஆடை விலை உயரும் என, அதிருப்தி அடைந்துள்ளனர்; இதனால், அந்நாட்டு அரசு, நிச்சயம் முடிவை மறுபரிசீலனை செய்யும். இது, தற்காலிக சோதனைதான், அடுத்த நான்கு வாரங்களுக்கும் இவ்விவகாரத்தில் சுமுக தீர்வு கிடைக்கும்.

தேங்கிய ஆடை

ஏற்றுமதி துவக்கம் சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்:

இரண்டாம் நிலை வரி, 25 சதவீதம் தள்ளுபடியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால், வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது, திருப்பூருக்கு பாதிப்புதான். திருப்பூரில் இருந்து, 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அமெரிக்க ஏற்றுமதி நடக்கிறது. அதில், 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ஏற்றுமதியில் தான் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வர்த்தகர்களுடன் பேசி, 5 சதவீதம் வரை வரி சுமையை பகிர்ந்துகொள்வதாக கூறி, தேக்கமடைந்த ஆடைகள் இன்று (நேற்று) முதல் அனுப்பி வைக்கும் பணி துவங்கியுள்ளது. அமெரிக்க வர்த்தக இழப்பு, 3 ஆயிரம்கோடி ரூபாயை ஈடுசெய்ய, ஐரோப்பியா மற்றும் பிரிட்டனுடன் புதிய வர்த்தக வாய்ப்பு உருவாக்கப்படும்.

திருப்பூரில், தலா 120 நாட்கள் வீதம், மூன்று கட்டமாக ஆர்டர் பெற்று அனுப்புகிறோம். அதில், இந்த சீசன் மட்டும் பாதிக்கும். அடுத்த சீசனில், சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும்.அமெரிக்க வரி உயர்வால், அந்நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவர். இந்த வரி உயர்வு நீண்ட நாள் இருக்காது; தற்காலிகமானது.

ரூ.12 ஆயிரம் கோடி; ஆடை தேக்கம்

இளங்கோவன், தலைவர், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு:

அமெரிக்காவின், 50 சதவீத வரி உயர்வால், பாதிப்பு இருக்கத்தான் செய்யும். குறிப்பாக, அமெரிக்காவுடன் மட்டும் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள், சில மாதங்கள் தாக்குப் பிடித்து, மாற்று நாடுகளுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.

நாடு முழுவதும், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் தேக்கமடைந்துள்ளதாக, கணக்கிட்டுள்ளனர். மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்து, தொழிலை பாதுகாக்க வேண்டும். அமெரிக்காவிலும் இதன் எதிரொலியாக விலை உயரும்; அதனை தொடர்ந்து, வரி விதிப்பு குறைக்கப்பட வாய்ப்புள்ளது.

நிவாரண உதவி; திட்டம் அவசியம்

செந்தில்வேல், பொதுசெயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் (டீமா) சங்கம்: பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் சமாளித்து விடும்; குறு, சிறு ஏற்றுமதி நிறுவனங்கள், அமெரிக்க வரிவிதிப்பால், மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய வேண்டும்.

தேங்கியுள்ள ஆடைகளை அமெரிக்க வர்த்தகர்கள் பெறாவிட்டால், நஷ்டம் ஏற்படும்; மே முதல், ஆக., மாதம் வரையிலான அமெரிக்க ஏற்றுமதியால் பாதிக்கப்பட்டவருக்கு, மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்