முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு பிணை

26 ஆவணி 2025 செவ்வாய் 14:34 | பார்வைகள் : 178
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
அவர் ZOOM தொழில்நுட்பத்தினூடாக வழக்கில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபரான ரணில் விக்ரமசிங்க, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
வழக்கு விசாரணைகள் ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
10 பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக ரூ.16.6 மில்லியன் மதிப்பிலான அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3