ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கான அனுமதி வாபஸ்: கடும் எதிர்ப்பால் தமிழக அரசு பல்டி

25 ஆவணி 2025 திங்கள் 11:55 | பார்வைகள் : 145
ராமநாதபுரம் மாவட்டத்தில், ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு, தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதும், அனுமதியை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தனிச்சியம், பேய்குளம், கீழசெல்வனுார், கே.வேலங்குப்பம், காவனுார், காமன்கோட்டை, சிறுவயல், ஏ.மணக்குடி, சீனங்குடி, அழகர்தேவன்கோட்டை உள்ளிட்ட 20 இடங்களில், ஹைட்ரோகார்பன் ஆய்வை நடத்த, மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கி உள்ளது.
கண்டனம்
இத்தகவல் வெளியானதும், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக அரசை கண்டித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலர் அர்ஜுனன் உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு, 2020ம் ஆண்டு, தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை இயற்றியது.
இச்சட்டத்தின் அடிப் படையில், தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் போன்றவற்றில், புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன், ேஷல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் அகழ்வு தொழில்கள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
2023ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்தது.
அறிவுறுத்தல்
இதற்கு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நேரடியாக, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய செய்தி, தமிழக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
ஓ.என்.ஜி.சி., நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெறுமாறு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழகத்தின் எந்தவொரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான, எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே முதல்வர் ஸ்டாலினின் திடமான கொள்கை.
எனவே, தற்போது, மட்டுமின்றி, எதிர்காலத்திலும், மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும், இந்த திட்டங்களை செயல் படுத்த, தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3