Paristamil Navigation Paristamil advert login

திருப்பரங்குன்றம் மலை மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்

திருப்பரங்குன்றம் மலை மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்

22 ஆவணி 2025 வெள்ளி 13:45 | பார்வைகள் : 153


திருப்பரங்குன்றத்தில், ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையின் எல்லையை அளவீடு செய்வதற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை' என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை'யாக மாற்ற முயற்சிப்பதாக, ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், 'மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிட்டார்.

இதுபோல, கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், 'பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவற்றை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்; நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மாற்றப்பட்டன. அதன் மீதான விசாரணை, நேற்று நடந்தது.


அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், 'ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால்தான் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மலையை, 'ட்ரோன்' மூலம் அளவீடு செய்ய, விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அளவீடு செய்தால் தான் எல்லையை நிர்ணயிக்க முடியும். ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை' என வாதிட்டார்.

தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், 'தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை ஹிந்து அமைப்புகள் தடுக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையை, 'ஸ்கந்தர் மலை, சிக்கந்தர் மலை' என வருவாய்த்துறை ஆவணங்களில் இருப்பது குறித்து, கடந்த 1923ல் மதுரை சார்பு நீதிமன்றம், கடந்த 1931ல் லண்டன் பிரிவியு கவுன்சில் தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வெயிலுக்குகந்த அம்மன் கோவிலில், ஆடு, கோழி பலியிடும் வழக்கம் உள்ளது. மேலும், தர்கா பகுதி, முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அங்கு வழிபாட்டு உரிமையை தர்கா நிர்வாகம் தான் முடிவு செய்யும். வெளியிலிருந்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது' என வாதிட்டார்.

இந்த விவாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆக., 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 

8 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்