குற்ற வழக்கில் கைதானால் பிரதமரே ஆனாலும் பதவி போகும் : புதிய மசோதா அறிமுகம்

21 ஆவணி 2025 வியாழன் 10:21 | பார்வைகள் : 138
பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதன் நகலை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
பார்லி., நேற்று காலை கூடியதும், பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு சபைகளும் மதியம் 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் மீண்டும் லோக்சபா கூடியபோது, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களான மணிஷ் திவாரி, பிரேம சந்திரன் உள்ளிட்டோர் மசோதாவை தாக்கல் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக சபையில் விவாதிக்க வேண்டும் என கூறி கூச்சலிட்டனர். இதனால், கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது இருக்கையில் இருந்து எழுந்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''கடும் அமளியில் ஈடுபட்டாலும், சபை அலுவல்கள் தடைபடாது; தொடர்ந்து நடக்கும்,'' என ஆவேசமாக பேசினார். இதனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் ரகளை அதிகமாக, லோக்சபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு சபை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பெரும் அமளிக்கு இடையே, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைதான 31 நாட்களில் தானாக பதவி இழக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 130வது திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் நிர்வாக திருத்த மசோதா மற்றும் ஜம்மு- - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அறிமுக நிலையிலேயே இம்மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்., - எம்.பி.,யான மணிஷ் திவாரி, ''இந்த மசோதாக்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை,'' என விமர்சித்தார். ஆர்.எஸ்.பி., - எம்.பி., பிரேம சந்திரன், ''அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாக்களை படித்து புரிந்து கொள்வதற்கு கூட கால அவகாசம் தராமல், அவசர கதியில் நிறைவேற்ற துடிப்பதற்கு என்ன காரணம்?'' என, கேள்வி எழுப்பினார்.
காங்., - எம்.பி.,யான கே.சி. வேணுகோபால், ''அரசியலில் நேர்மையுடன் நடக்க வேண்டும் என அறிவுரை கூறினால் மட்டும் போதாது. வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது குற்ற வழக்கில் சிக்கி கைதானதை மறந்து விட்டீர்களா? அப்போது உங்களது நேர்மை எங்கே சென்றது?
''குற்ற வழக்கில் சிக்கிய உங்களுக்கு இந்த மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது,'' என அமித் ஷாவை நோக்கி காட்டமாக குற்றஞ்சாட்டினார்.
இதனால் கோபமான அமைச்சர் அமித் ஷா, ''உண்மைக்கு புறம்பான தகவலை கூற வேண்டாம். அந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை. அப்போதும் கூட விசாரணைக்காக பொறுப்புடன் ஒத்துழைத்தேன். கைதாகி சிறைக்கு செல்லும் முன்பாகவே, அமைச்சர் பதவியில் இருந்து தார்மீக அடிப்படையில் விலகினேன்.
இறுதியாக வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவிக்கும் வரை, எந்த பதவியையும் நான் ஏற்கவில்லை,'' என கூறினார். எனினும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். சபையின் மையப்பகுதிக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஒரு சில எம்.பி.,க்கள் மசோதாக்களின் நகலை கிழித்து அமித் ஷாவை நோக்கி குப்பை போல வீசியெறிந்தனர்.
இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதை அடுத்து சபையை, சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை, மதியம் 3:00 மணிக்கு கூடியபோது, மூன்று முக்கிய மசோதாக்களையும் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை பார்லிமென்ட்டின் கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு சொல்வது என்ன?
அரசியலமைப்பு மற்றும் நெறிமுறைகளை பாதுகாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்யவும் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், மக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள் தான்.
இருப்பினும் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும்போது, பிரதமர் அல்லது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கு தற்போது அரசியல் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. பதவியில் உள்ளவர்களின் நடத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால், அது அரசியலமைப்பு மீது, மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க செய்து விடும். இதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொடுஞ்சட்டம்: ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:லோக்சபாவில் தாக்கல் செய்த 130வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் சீர்திருத்தம் அல்ல. இது ஒரு கருப்பு மசோதா. இந்நாள் ஒரு கருப்பு நாள். 30 நாள் கைது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் பதவி நீக்கம், விசாரணை இல்லை போன்ற அம்சங்கள் எல்லாம் பா.ஜ.,வின் சர்வாதிகாரப் போக்கு.
'ஓட்டுகளை திருடு, எதிரிகளின் குரல் வளையை நசுக்கு, மாநில சுயஅதிகாரத்தை பறி' ஆகியவை தான் சர்வாதிகாரத்தின் கோட்பாடுகள். இப்படியான சர்வாதிகாரத்துடன் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவுக்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைத்து பார்க்கும் இம்மசோதா கொண்டு வரப்படுவதை கண்டிக்கிறேன்.
பிரதமருக்கு கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றவே அரசியலமைப்புச் சட்டத்தையும், அடித்தளத்தையும் களங்கப்படுத்த மத்திய அரசு, முடிவெடுத்து உள்ளது. எந்த சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தன் எதிராளிகளை கைது செய்யும், பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை தனக்கு தானே வழங்கி கொள்வது தான். அதைத்தான் இந்த சட்டத்திருத்தமும் செய்ய முயற்சிக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1