அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டு பாருங்கள்: இபிஎஸ் பேச்சு

19 ஆவணி 2025 செவ்வாய் 11:58 | பார்வைகள் : 128
அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டு அதில் எது சிறந்தது என மக்கள் முடிவு செய்ய வேண்டும்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கலசபாக்கம் பகுதியில் பேசியதாவது: மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, எது சிறந்தது என்று முடிவுசெய்து 2026 தேர்தலில் முடிவை வழங்குங்கள். அதிமுக ஆட்சி மக்களாட்சி, திமுக குடும்ப ஆட்சி. மக்களுக்காக திட்டம் தீட்டினோம், திமுக குடும்பத்துக்காக திட்டம் போட்டு கோடிகோடியாகக் கொள்ளையடிக்கிறது. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் சகஜமாகிவிட்டது. இளைஞர்கள் சீரழிவதால் குடும்பங்கள் அழிகிறது. எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. பணம் கொடுக்காமல் எதுவும் நடக்காது.
யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ, அவர்களை எல்லாம் சிறந்த அமைச்சர் என்று பட்டம் சூட்டுகிறார். சிறந்த நிர்வாகம் செய்பவர்களுக்குப் பட்டம் கிடையாது, துட்டு அதிகமாகக் கொடுப்பவர்தான் சிறந்த அமைச்சர். எல்லா அரசிலும் நிர்வாகத் திறமைமிக்க அமைச்சர்களுக்கே மதிப்பு. ஆனால், திமுக ஆட்சியில் கப்பம் கட்டுபவர்களுக்குத்தான் நல்ல இலாகா உண்டு. இன்று அதிமுகவில் இருந்துதான் பல பேர் அமைச்சர்களாக டெபுடேஷனில் திமுகவுக்கு போயிருக்கிறார்கள். அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் திமுக அமைச்சரவையில் உள்ளனர். பலர் எம்.எல்.ஏ . ஆகியிருக்கிறார்கள். இவர்கள் சரியான முறையில் மாமுல் வாங்கி மேலிடத்துக்கு கொடுக்கிறார்கள். அதனால் திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.