ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான்

18 ஆவணி 2025 திங்கள் 12:47 | பார்வைகள் : 221
ஈரானும் இஸ்ரேலும் பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இஸ்ரேலுக்கு மீண்டும் தூக்கமில்லாத இரவுகளை அளிக்க ஈரான் தயாராகி வருகிறது.
ரஷ்யாவின் S-400 வான்பாதுகாப்பு அமைப்பை ஈரான் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளதாக வெளிவரும் தகவல் இன்னொரு போருக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
வெளிவரும் தகவலின் அடிப்படையில், ஜூலை 26 அன்று இஸ்ஃபஹான் அருகே S-400 அமைப்பை ஈரான் முதன்முறையாக சோதித்துள்ளது. ஜூன் மாதம் நடந்த போரின் போது இஸ்ரேலிய விமானப்படை ஈரானின் S-300 வான் பாதுகாப்பு அமைப்பை அழித்தது.
மட்டுமின்றி, அந்தப் போரில், ஈரானின் கிட்டத்தட்ட அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளையும் இஸ்ரேல் அழித்துவிட்டது அல்லது கடுமையாக சேதப்படுத்திவிட்டது, அதன் பின்னர் ஈரானிய வான்வெளி பாதுகாப்பில்லாமலே உள்ளது.
இந்த நிலையில், தற்போது ரஷ்யாவின் அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான S-400 ஐ ஈரான் சோதித்துள்ளது. இதே S-400 அமைப்பையே இந்தியாவும் பயன்படுத்தி வருகிறது.
ஜூன் மாதத்தில் போரின் போது, இஸ்ரேல் முதலில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார்களையே குறிவைத்து அழித்தது. பின்னர் அது ஈரானின் டசின் கணக்கான இலக்குகள் மீது போர் விமானங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
தற்போதும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டங்கள் தணியான நிலையில், ரஷ்யாவின் மேம்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பை ஈரான் நிலைநிறுத்துவதால் மற்றொரு போருக்கான சாத்தியங்கள் இருப்பதாகவே அஞ்சப்படுகிறது.