ராகுலுக்கு தேர்தல் கமிஷனர் கண்டிப்பு: கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை என்கிறது காங்கிரஸ்

18 ஆவணி 2025 திங்கள் 12:48 | பார்வைகள் : 113
தேர்தல் கமிஷனர் பேட்டி தொடர்பாக பதிலளித்துள்ள காங்கிரஸ்,'' ராகுலின் பேட்டி குறித்து இன்னும் பதிலளிக்கப்படவில்லை, '' எனத் தெரிவித்துள்ளது.
டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்வர் குமார், '' ஓட்டுத் திருட்டு தொடர்பாக புகார் தெரிவித்த ராகுல் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும். அல்லது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், '' எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியதாவது: இன்று ராகுல் பேரணி துவக்கிய பிறகு நிருபர்களைச் சந்தித்த தேர்தல் கமிஷனர்கள், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே வேறுபாடு காட்டப்படவில்லை எனக்கூறியுள்ளார். இது நகைப்புக்குரியது. ராகுல் எழுப்பிய கேள்விகளில் ஒன்றுக்குக் கூட பதில் அளிக்கப்படவில்லை. தேர்தல் கமிஷனின் திறமையின்மை மட்டுமல்லாமல், ஒரு தலைபட்சமான செயல்பாடு அம்பலப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது: நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தேர்தல் கமிஷனின் அரசியல் சாசன கடமை. வாக்காளர் பட்டியல் குறித்த நகல் பாஜவிடம் உள்ளது. காங்கிரசிடம் வழங்கப்படாதது ஏன்? இந்த கேள்வியை மனதில் வைத்தே, பீஹாரில் ராகுல் யாத்திரை மேற்கொண்டு உள்ளார், என்றார்.
காங்கிரசின் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், தேர்தல் கமிஷனால் இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டவர்கள் ராகுலுடன் தேநீர் அருந்துகின்றனர். இதற்காக தேர்தல் கமிஷனர்கள் வெட்கப்பட்டார்களா? நாங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.
ஆறு தொகுதி வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள் பாஜ எம்பி அனுராக் தாக்கூருக்கு கிடைத்தது எப்படி?எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவருக்கும் பாஜவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதா? தேர்தல் கமிஷனர் பாஜ ஏஜென்ட் போல் செயல்படுகிறார்.
அரசியல்சாசனத்தை பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம். எஜமானார்கள் பயப்படும் போது தேர்தல் கமிஷனர்களும் பயப்படுகின்றனர். தவறு செய்தவர்கள் பயப்படுகின்றனர். ஜனநாயகம் மீது தாக்குதல் நடத்துபவர்கள் பயப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.