இளையராஜா இசையில் செய்தது என்ன? ஏ.ஆர். ரகுமான்

14 புரட்டாசி 2025 ஞாயிறு 18:40 | பார்வைகள் : 187
இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்” என இசைஞானி இளையராஜாவின் பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவுக்கு நேற்று (13ஆம் தேதி) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்திய இளையராஜாவுக்கு, அவரது அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அந்த வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை 5.30 மணிக்கு சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இளையராஜாவுக்கு வாழ்த்து கூறி இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழ்நாட்டுக்கே தனி பெருமைத் தேடி தந்தவர் இசைஞானி.
இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்.
குறிப்பாக திரை இசையைக் கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில், அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி எனும் சாதனை, ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத் துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக் கூடிய சாதனையாக இருக்கிறது.
அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெரும் மகிழ்ச்சிகொள்கிறேன். இசைஞானி இளையராஜாவின் பொன் விழா ஆண்டை தமிழ்நாடு அரசே ஒருங்கிணைத்து கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025