மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழகம்

13 புரட்டாசி 2025 சனி 12:49 | பார்வைகள் : 129
மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது. இதற்காக தமிழக அரசு, ரிசர்வ் வங்கியில், 92 தனித்தனி கணக்குகளை துவக்கி உள்ளது.
ஊரக வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு, விவசாயம் போன்ற பல துறைகளில், மத்திய அரசு சார்பில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான நிதியை ஒதுக்கினாலும், அதை பயன்படுத்தி, மாநிலங்களில் நேரடியாக மத்திய அரசால் திட்டப் பணிகளை செயல்படுத்த முடியாது. மாநில அரசுகளே, இந்நிதியை பயன்படுத்தி, வேறு பெயர்கள் சூட்டி திட்டங்களை செயல்படுத்துவது வழக்கம்.
இதுவரை திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியானது, மாநில அரசு துறைகளுக்கான கருவூல கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு பெறப்படும் நிதி, மத்திய அரசின் நோக்கத்தை சரியாக பூர்த்தி செய்கிறதா என்பது கேள்விக்குறியே. சில நேரங்களில், குறிப்பிட்ட திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, மாநில அரசுகள் வேறு பணிக்கு பயன்படுத்துவதும் உண்டு. இதனால், திட்டத்தின் பயன் மக்களுக்கு கிடைக்காமல் போகிறது.
இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதியை பெற, ரிசர்வ் வங்கியில் மாநில அரசு ஒரு கணக்கு துவக்க வேண்டும். அந்த கணக்கில், சம்பந்தப்பட்ட திட்ட பணியை மேற்கொள்ளும் நிறுவனம் அல்லது நபர்கள் குறித்த விபரங்கள் சேர்க்கப்படும். குறிப்பிட்ட திட்ட பணிகள் முடிந்த விபரத்தை தெரிவிக்கும் போது, ரிசர்வ் வங்கியில் இருந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது நபர்களுக்கு, மத்திய அரசின் நிதி நேரடியாக சென்று விடும்.
இதுகுறித்து, தமிழக அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
திட்டப்பணிகளுக்கான செலவு தொகையை நேரடியாக வழங்கும் புதிய நடைமுறையை, மத்திய அரசு, 2024 - 25ம் நிதியாண்டில் துவக்கியது. இதில், தமிழகமும் சேர்ந்துள்ளது. அதன்படி, மத்திய அரசு நிதி வழங்கும் திட்டங்களில், தமிழகம் தொடர்புடைய, 96 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 92 திட்டங்களுக்கு கருவூலத்துறை வாயிலாக, ரிசர்வ் வங்கியில் பணம் எடுக்க கணக்கு துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 46 திட்டங்களுக்கு நேரடியாக மத்திய அரசு நிதி விடுவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025