Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ.,வில் மத்திய அமைச்சர் தலையீடு; ஓரங்கட்டப்படுகிறாரா அண்ணாமலை?

பா.ஜ.,வில் மத்திய அமைச்சர் தலையீடு; ஓரங்கட்டப்படுகிறாரா அண்ணாமலை?

13 புரட்டாசி 2025 சனி 09:49 | பார்வைகள் : 134



சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், கட்சி வளர்ச்சி பணியில் தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மெத்தனமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:


தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாக செயல்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஏழு மாதங்களே உள்ளன.

அதிக ஆதிக்கம் தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சி வளர்ச்சி பணிகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பா.ஜ.,வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களுக்கு வேண்டிய கட்சியின் மூத்த தலைவர்கள் எங்கு செல்கின்றனரோ, அவர்களுடன் செல்வது, அதை புகைப்படம் எடுத்து, சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது உள்ளிட்ட பணிகளில் மட்டுமே, கவனம் செலுத்துகின்றனர்.

இதற்கிடையில், தமிழக பா.ஜ.,வில், மத்திய அமைச்சராக உள்ள ஒருவரின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளது. ஒருமுறை கூட தேர்தல் அரசியல் பக்கமே போகாதவர். அப்படிப்பட்டவரின் ஆதரவாளர்களுக்கு, தமிழக பா.ஜ.,வில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது கட்சியில், முணுமுணுப்பையும், கோஷ்டி பூசலையும் அதிகரித்துள்ளது.


செல்வாக்கு இல்லை


இதற்கிடையே, தமிழக பா.ஜ.,வின் பல்வேறு பிரிவுகளுக்கு 25க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதில், அண்ணாமலை ஆதரவாளர்களாக இருந்த பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டனர். அதற்கு, மத்திய அமைச்சரின் தலையீடே காரணம் என பேசப்படுகிறது.

இப்படி நியமிக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு, தொண்டர்களிடம் செல்வாக்கு இல்லை. அதனால், அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், கட்சியினர் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால், மொத்த கட்சியும் செயல்பாடின்றி சுணக்கமாகி உள்ளது. இது தொடர்பான செய்திகள், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வாயிலாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கும் சென்றுள்ளது.

அவர் பார்த்து ஏதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வரும் சட்டசபைத் தேர்தலை தமிழக பா.ஜ., தெம்பாக சந்திக்க முடியும்; இல்லாவிட்டால், லோக்சபா தேர்தலில் பா.ஜ., பெற்ற ஓட்டுகளில் மிகப்பெரிய சரிவு ஏற்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், அண்ணாமலையை மிகக் கடுமையாக எதிர்க்கும் தமிழக பா.ஜ., துணைத் தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:


பா.ஜ.,வில் முதலாளி போன்று இருந்தவர்கள், மீண்டும் அதுபோல தங்களையே முன்னிலைப்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

அப்படியெல்லாம் செய்ய முடியாது. இதெல்லாம் அதிகாரிகளாக இருந்தவர்களுக்கு புரியாது. ஏனென்றால், இன்றுவரை, அதிகார தோரணையிலேயே இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்