Paristamil Navigation Paristamil advert login

“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்”

“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்”

11 புரட்டாசி 2025 வியாழன் 16:03 | பார்வைகள் : 114


கடந்த 1ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு

முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கும் அதிரடி விஜயம் செய்து அங்குச் சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெயரையும் வரலாற்றில் பதிவு செய்துகொண்டார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியான நிலையில், இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி நாட்டினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் தமிழ் அரசியல் தரப்புக்களிடமும் ஏற்பட்டிருந்தது.

ஜனாதிபதி செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு வருகை தர வேண்டுமென்ற வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி உரையாற்றும் போது, “செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை.

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது” என தமிழ் மக்களுக்கு உறுதியளித்த நிலையில் அவர் எப்படியும் செம்மணிக்கு வந்து மனிதப் புதைகுழிகளை பார்வையிடுவார் என்றும் இதன்மூலம் தனக்கும் தனது கட்சிக்கும் பெருமளவில் வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் ஒரு செய்தியைச் சொல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என முன்னதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் கூறியிருந்தார். அதுமட்டுமன்றி அரச தரப்பின் பல்வேறு தரப்பினராலும் உறுதியுமளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், யாழ்ப்பாணத்திற்குக் குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே வந்து விட்ட ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கிநின்றபோதும் செம்மணி வீதியை ஜனாதிபதி வாகனத் தொடரணியாக கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியைச் சென்று பார்வையிடவில்லை.செம்மணிப் பகுதியில் வாகனத்தை மெதுவாகச் செலுத்திக் கூட அப்பகுதியைப் பார்க்க அவர் விரும்பவில்லை.

 

ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி அமைச்சர்,எம்.பிக்கள் ஏற்கெனவே செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்ட நிலையில், இலங்கையில் செம்மணி மட்டுமன்றி, கொக்குத்தொடுவாய், மண்டைதீவ, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் உள்ளநிலையில், இந்த புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்‌ஷக்களே தவிர நாம் அல்ல.

 

இந்த புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோருடன் தொடர்புடைய சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவாகியுள்ளனர்.

 

இந்த மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான, விசாரணைகள் போன்றவற்றுக்கு நாம் போதியளவு நிதியை ஒதுக்கி வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

 

இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியைச் சென்று பார்வையிட்டிருக்க முடியும். ஆனால், தமக்கோ, தமது கட்சிக்கோ, தமது அரசுக்கோ தொடர்பில்லாத செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அனுரகுமார பார்வையிடாததற்கு இனவாத சிந்தனையும் சிங்களவர்களை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலுமே பிரதான காரணம்.

 

இந்த செம்மணி மனிதப் புதைகுழி புறக்கணிப்பு மூலம் சிவப்பு சட்டைக்காரர்களான ஜே .வி.பியினர் இன்னும் இனவாதத்திலிருந்து மாறவில்லை அவர்கள் ஒருபோதுமே மாறப்போவதில்லை.’மாற்றம்’, ‘புதிய திசை’ என்பதெல்லாம் வெறும் கோஷம் என்பதையே ஜனாதிபதி அநுரகுமாரவின் யாழ்ப்பாண விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார தனது பயண நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத அல்லது உள்ளடக்கப்பட்டும் இறுதிவரை வெளிப்படுத்தப்படாத கச்சத்தீவு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 

இதன்மூலம் இந்தியாவைப் பகைக்க நேரிடும், அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என தெரிந்தும் சிங்கள, தமிழர்களைத் திருப்திப்படுத்த, எமது நிலத்தின் ஒரு அங்குலத்தையேனும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லையென்பதனை வெளிப்படுத்தவே சிங்கள, தமிழ் அரசியல் ஆதாயத்திற்காக ஜனாதிபதி கச்சத்தீவுக்குக் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வரலாற்றுப்பதிவை ஏற்படுத்தினார்.

 

அதே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குள் உள்ள செம்மணி மனித புதைகுழிப் பகுதிக்கும் விஜயம் செய்திருந்தால், இலங்கையில் அகழப்படும் மனிதப் புதைகுழிப் பகுதியைச் சென்று பார்வையிட்ட முதல் ஜனாதிபதி என்ற வரலாற்றுப் பதிவிலும் ஜனாதிபதி அனுரகுமார இடம்பிடித்திருப்பார்.

 

தமிழ் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்திருப்பார். ஆனால், சிங்களவர்களினால், சிங்கள படைகளினால் ஏற்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஜனாதிபதி என சிங்களவர்களினால் புறக்கணிக்கப்பட்டிருப்பார், வெறுக்கப்பட்டிருப்பார், விமர்சிக்கப்பட்டிருப்பார்.

 

ஆகவே, தான் சிங்களவர்களே முதல் விருப்பத் தெரிவு, அவர்களைப் பகைக்க முடியாது என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி அனுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடத்திற்குச் செல்லவில்லை.

 

அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் ஜே.வி.பியினர் ஒன்றும் புனிதமானவர்களோ மாற்றமானவர்களோ அல்ல. அவர்களும் பக்கா இனவாதிகள்தான். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அழிக்க 50,000 சிங்கள இளைஞர்களை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்து கொடுத்தவர்கள்.

 

அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான நோர்வே அனுசரணையிலான சமாதான முயற்சிகளைச் சீர்குலைத்து யுத்தத்துக்குத் தூண்டியவர்கள் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சுனாமி பொதுக் கட்டமைப்பை கடுமையாக எதிர்த்து மக்களைத்தூண்டி போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களை வழக்கு தாக்கல் செய்து பிரித்தவர்கள்.

 

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்க ஆட்சி பீடமேறிய அனைத்து அரசுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள்.

 

ஆகவே, என்னதான் தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியைப் போட்டு ‘மாற்றம்’ ஏற்படுத்த வந்தவர்களாக, புதிய திசையில் நாட்டையும் மக்களையும் பயணிக்க

 

வைக்க வந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கா தலைமையிலான ஜே.வி.பியினர் என்ற இனவாதிகள் மாறு வேடத்தைப் போட்டாலும், ‘போக்கிரி’ படத்தில் வரும் வடிவேலு போல் ‘மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே’ என்ற கதையாகவே தமது இனவாத சிந்தனையிலிருந்து அவர்கள் மாறவே இல்லையென்பதனையும் மாறப்போவதில்லை என்பதனையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய யாழ்ப்பாண விஜயமும் செம்மணி மனிதப் புதைகுழி விடயமும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

அத்துடன், இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைவரும் ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ தான் என்பதனை தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் நிரூபித்து தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்.

 

நன்றி tamilmirror

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்