Paristamil Navigation Paristamil advert login

போராட்டத்தின் தீவிரம் - இராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம் !

போராட்டத்தின் தீவிரம் - இராணுவ கட்டுப்பாட்டில் நேபாளம் !

10 புரட்டாசி 2025 புதன் 19:15 | பார்வைகள் : 409


நேபாளத்தில் தற்போது நடந்துவரும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு முக்கிய காரணம், அரசாங்கத்தின் சமூக ஊடகத் தடையாகும். 

இந்தத் தடைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், பின்னர் ஊழல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, முழு அளவிலான அரசாங்க எதிர்ப்பு இயக்கமாக மாறியுள்ளது.

 

நேபாள அரசு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் உட்பட 26 சமூக ஊடக தளங்களை மூடியது.

 

இந்தத் தளங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்று அரசு காரணம் கூறியது. இது "Gen Z" இளைஞர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

 

சமூக ஊடகத் தடை ஒரு தூண்டுகோலாக அமைந்தாலும், இளைஞர்கள் மத்தியில் நிலவி வரும் உண்மையான கோபம், அரசாங்கத்தின் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருந்தது.

 

போராட்டங்கள் தீவிரமடைந்தபோது, பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடிக்கு 19 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த உயிரிழப்புகள், போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியது.

 

மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக, பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை இராஜினாமா செய்தார். மேலும், ஜனாதிபதி ராம்சந்திர பவுடலும் பதவி விலகியுள்ளார். இந்த நிலைமை நேபாளத்தை ஒரு நிச்சயமற்ற அரசியல் சூழலில் தள்ளியுள்ளது.

 

 

போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லம், நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட பல அரசு மற்றும் தனியார் கட்டிடங்களுக்குத் தீ வைத்துள்ளனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

 

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நேபாள இராணுவம் களமிறங்கியுள்ளது. தலைநகர் காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்துள்ளது.

 

பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள வணிக வளாகங்களுக்குள் வன்முறைக் கும்பல்கள் நுழைந்து, அங்கிருந்த தொலைக்காட்சி, ஏசி, குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற மின்னணுப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

போராட்டங்களால் மூடப்பட்டிருந்த காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து புதன்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில், நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம், சமூகப் போராட்டங்கள் மற்றும் அதன் விளைவாக எழும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் தற்போது தலைதூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், நேபாளில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து போராட்டம் சற்றுத் தணிந்துள்ளது. நாடு முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் நேபாளத்தில் சற்று அமைதி திரும்பி வருகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்