நேபாளத்தில் கலவரத்தில் முடிந்த Gen Z போராட்டம்... தடையை நீக்கிய அரசாங்கம்

9 புரட்டாசி 2025 செவ்வாய் 11:09 | பார்வைகள் : 225
Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, நேபாள அரசாங்கம் சமூக ஊடக செயலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது.
குறித்த போராட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 19 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், தற்போது நேபாள அரசாங்கம் தடையை நீக்கியுள்ளது.
சமூக ஊடக தளங்களைத் தடை செய்வதற்கான முந்தைய முடிவை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளதாக தகவல் தொடர்பு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக தளங்களைத் தடை செய்வதற்கான முந்தைய முடிவுக்கு அரசாங்கம் வருத்தப்படவில்லை என்றும் அமைச்சர் குருங் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பிரச்சினையை ஒரு சாக்காகப் பயன்படுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டதால், சமூக ஊடக தளங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் Gen Z குழுவினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், போராட்டத்தின் போது முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய அமைச்சரவை ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை சம்ர்ப்பிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது, தடைசெய்யப்பட்ட சமூக ஊடக தளங்களில் ஒன்றான எக்ஸ், நேபாளத்தின் தேசிய இறையாண்மையை அவமதிக்கும் வகையில் பதிலளித்ததாக பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறியிருந்தார்.
மேலும், எலோன் மஸ்க்கின் எக்ஸ் தளம் நேபாளத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் தரப்பில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலி தெரிவிக்கையில், நாங்கள் இதை ஒன்றரை வருடங்களாகக் கூறி வந்தோம். அவர்களைப் பதிவு செய்யச் சொன்னோம். நேபாளச் சட்டங்களுக்குக் கீழ்ப்படியச் சொன்னோம். இது எங்களது தேசிய இறையாண்மையை மதிக்கும் விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளின் கீழ் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நிறுவனங்கள் தவறவிட்டதால், கடந்த வாரம், நேபாள அரசாங்கம் பல சமூக ஊடக தளங்களுக்கான அணுகலைத் தடை செய்தது.
சமூக ஊடக பயனர்கள் போலி கணக்குகளை உருவாக்கி, இந்த தளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் போலி செய்திகளைப் பரப்பவும், மோசடி மற்றும் பிற குற்றங்களைச் செய்யவும் பயன்படுத்துவதாக நேபாள அரசாங்கம் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பொலிஸ் தடுப்புகளை உடைத்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றி அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவை விதித்தனர்.
மட்டுமின்றி, கூட்டத்தைக் கட்டுப்படுத்த தண்ணீர் பீரங்கி, தடியடி மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தவும் காவல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1