Paristamil Navigation Paristamil advert login

கணவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு...

கணவர்களின்  மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு...

7 புரட்டாசி 2025 ஞாயிறு 16:46 | பார்வைகள் : 142


அமெரிக்காவின் காட்மேன் இன்ஸ்டிடியூட் ஆய்வின்படி, மனைவியின் ஆலோசனையை மதித்து, அவர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் கணவர்கள் வாழ்க்கை மட்டுமின்றி, தொழிலிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

“மகிழ்ச்சியான மனைவி, மகிழ்ச்சியான வாழ்க்கை” என்ற பழமொழிக்கு விஞ்ஞான ஆதாரம் கிடைத்துள்ளது. உறவுகள் மற்றும் திருமண வாழ்வைப் பற்றி பல ஆண்டுகளாக நடந்த ஆய்வுகளின் அடிப்படையில், அமெரிக்காவின் தி காட்மேன் இன்ஸ்டிடியூட்டின் தலைவரான டாக்டர் ஜான் காட்மேன், மனைவிகளின் ஆலோசனையைக் கேட்டு, அவர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் கணவர்களே நீண்ட நாள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்றும், தொழில் வாழ்க்கையிலும் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் கூறுகிறார்.

சிசெஸ்ட் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “வாஷிங்டனில் உள்ள தி காட்மேன் இன்ஸ்டிடியூட்டின் டாக்டர் ஜான் காட்மேன், நீடித்த திருமணங்களின் ரகசியங்களைப் பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வருகிறார். புதுமணத் தம்பதிகளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட அவரது சமீபத்திய ஆய்வில், ஒரு வியப்பூட்டும் உண்மை வெளிப்பட்டது. தங்கள் மனைவிகளை குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் கணவர்களே உறுதியான, மகிழ்ச்சியான மற்றும் நீடித்த திருமண வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்.

பெண்களே, இந்த பதிவை உடனே உங்களது கணவர்களுக்கு பகிருங்கள்... “ஆய்வு சொல்கிறது” என்று காட்ட நல்ல சான்று கிடைத்துவிட்டது!” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காட்மேனின் கூற்றுப்படி, ஆண்கள் தங்கள் மனைவிகளை உணர்ச்சிப் பூர்வமாக மதித்து, அவர்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கும் போது, அது உறவின் உறுதிப்பாட்டை பலப்படுத்தும். “மனைவிகளின் கருத்தை அல்லது செல்வாக்கை எதிர்க்கும் ஆண்கள் அவர்கள் அறியாமலேயே பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள். ஆனால், அந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலை மற்றும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி கவனம் மற்றும் ஆதரவே இதற்கான அடிப்படை” என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மேலும் அவர், உணர்ச்சி ரீதியாக முதிர்ந்த கணவர்கள் தங்கள் மனைவிகளின் கருத்தை ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் அவர்கள் சிறந்த துணையாகவும், பாசமிகு தந்தையாகவும் மாறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் வைரலான இந்த ஆய்வு, பலரின் கவனத்தையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே ஈர்த்தது. பெண்கள் பலர் தங்கள் கணவர்களை டேக்(tag) செய்து, “மகிழ்ச்சிக்கான வழி இதுதான்!” என்று நினைவூட்டினர். ஒருவர், “உங்களுக்கு ஆயிரமாவது முறை இதைச் சொல்கிறேன்...” என சுட்டிக்காட்டினார்.

திருமண உறவுகள் மறுபரிசீலிக்கப்படும் இன்றைய சூழலில், காட்மேனின் ஆய்வு, மனைவியின் கருத்தை ஏற்றுக்கொள்வது சமத்துவத்திற்கும், உறுதியான குடும்ப வாழ்க்கைக்கும் வழிவகுக்கும் என்பதை நினைவுகூர்கிறது. இறுதியாக, உறவின் வெற்றிக்கான ரகசியம் ஒருவருக்கொருவர் செவிகொடுப்பதும், மதிப்பதும் தான் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்