Paristamil Navigation Paristamil advert login

அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ்க்கு 10 நாள் கெடு; மனம் திறந்தார் செங்கோட்டையன்

அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ்க்கு 10 நாள் கெடு; மனம் திறந்தார் செங்கோட்டையன்

5 புரட்டாசி 2025 வெள்ளி 14:37 | பார்வைகள் : 139


அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால், நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கட்சியில் அதிருப்தியில் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,யும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், இன்று (செப் 05) மனம் திறந்து பேச இருப்பதாக அறிவித்து இருந்தார். அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் போக வேண்டிய பேட்டி இது. ரொம்ப முக்கியமானது. முக்கியமான நேரம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். அதிமுகவை 1972ம் ஆண்டு எம்ஜிஆர் தொடங்கினார்.

அவர் தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சியின் கிளைச் செயலாளராக பணியாற்றினேன். 1975ல் கோவையில் நடந்த பொதுக்குழுவில் பொருளாளர் ஆக நியமித்தார்கள். 1977ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் என்னை போட்டியிடுமாறு எம்ஜிஆர் அறிவுறுத்தினார். எம்ஜிஆருக்கு பிறகு கட்சியை வழிநடத்தும் திறமை ஜெயலலிதாவுக்கே உண்டு என்று தலைவர்களுடன் நானும் சென்று வேண்டுகோள் விடுத்தேன்.

2 வாய்ப்புகள்

தமிழகத்தில் ஜெயலலிதா சிறந்த ஆட்சியை தந்தார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆளுமை மிக்க முதல்வராக விளங்கினர். ஜெயலலிதா மறைவுக்கு பல்வேறு சோதனைகள் வரும் அன்றைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து கட்சியை பேணி காப்பதற்கு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன.

இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போது கூட இந்த இயக்கம் உடை ந்துவிடக்கூடாது என்பதற்காக எனது பணிகளை மேற்கொண்டேன். இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பது தொண்டர்களின் நோக்கம் தான். அதிமுகவுக்காக பல தியாகங்களை செய்துள்ளேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நல்லாசி உடன் இந்த இயக்கம், மீண்டும் தமிழகத்தில் அமைய ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். 2016ம் ஆண்டிற்கு பிறகு தேர்தல் களம் எப்படி போராட்ட களமாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் தான் தேர்தல் களத்தில் நாம் வெற்றி பெற முடியும். பாஜவின் மூத்த தலைவர்கள் அழைப்பின் பேரில் தான் டில்லி சென்றேன்.

அதிமுகவை ஒன்றிணைக்க எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் 6 பேருடன் சென்று இ.பி.எஸ்ஸை சந்தித்தேன். அவர் எங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 2024ல் பா.ஜ., உடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் நாம் 30 இடங்களை வென்றிருப்போம்.

10 நாள்கள் கெடு

6 முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் அதனை ஏற்கவில்லை. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் சேர்ந்தால் தான் வெற்றி நிச்சயம்.

அதிமுகவில் இருந்து வெளியில் சென்றவர்களை ஒருங்கிணைப்பதற்கு நான் காலக்கெடு வைத்திருக்கிறேன். பத்து நாட்களுக்குள் ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் முன் நின்று ஒருங்கிணைப்போம். வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: நீங்கள் அடுத்த பொதுச்செயலாளராக முயற்சி செய்வீர்களா?

செங்கோட்டையன் பதில்: என்னை பொறுத்தவரை இந்த இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இந்த இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கமாக, ஜெயலலிதா 100 ஆண்டுகள் வாழும் குறிப்பிட்டது போல் அதற்காக எனது பணிகளை இன்று தொடங்கி இருக்கிறேன்.

நிருபர்: உங்களது கோரிக்கையை இபிஎஸ் நிராகரித்து விட்டால் உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

செங்கோட்டையன் பதில்: என்னை பொறுத்தவரைக்கும் இரண்டு விஷயங்களை சொன்னேன். விரைந்து இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான் எல்லோருடைய ஆசை.

அப்படி இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், இந்த மனநிலையில் இருப்பவர்களை எல்லோரும் சேர்ந்து ஒன்றிணைக்க முயற்சி செய்வோம். இது தான் எங்களுடைய நோக்கம். நான் கடைசியில் சொன்னேன்.

இந்த கோரிக்கையை விரைந்து செயல்படுத்தவில்லை என்றால் இவருடைய (இபிஎஸ்) சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.

நிருபர்: பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். எதற்காக அவர் மறுக்கிறார். அவரது தலைமைக்கு பாதிப்பு வரும் என்று நினைக்கிறாரா?

செங்கோட்டையன் பதில்: என்னை பொறுத்தவரைக்கும் அவரது மனநிலை பற்றி எனக்கு தெரியாது. என்னுடைய மனநிலை தொண்டர்களின் மனநிலை. பொதுமக்கள் இந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் மனநிலையை தான் நான் இங்கு வெளிப்படுத்தினேன்.

சஸ்பென்ஸ்

சசிகலா உட்பட  ஒத்தக்கருத்துடையவர்களை சந்தித்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது சஸ்பென்ஸ் என செங்கோட்டையன் பதில் அளித்தார்.


நிருபர்: ஓபிஎஸ் பிரிந்து சென்ற போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் எல்லாம் சந்தித்து பேசினீர்கள். அதனை மீறி ஓபிஎஸ் வெளியேறினார். கட்சியின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது ஓபிஎஸ் சேர்த்து கொள்ள சொன்னால் எப்படி சேர்க்க முடியும் என்று தான் இபிஎஸ் மனநிலை இருக்கிறதே?

செங்கோட்டையன் பதில்: அன்று தலைமை மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்த SDS-ஐயே மன்னித்தார் எம்.ஜி.ஆர். கவர்னரிடம் ஊழல் குற்றச்சாட்டு கூறியவர்களையே எம்ஜிஆர் இணைந்து பணியாற்றுங்கள் என்று சொன்னார். இவர்கள் அப்படி எல்லாம் சொல்லவில்லையே.

வர்த்தக‌ விளம்பரங்கள்