Paristamil Navigation Paristamil advert login

உக்ரேனிய சிறார்களை கடத்திச் சென்றதில் ரஷ்யா மீது தடைகள் விதித்த பிரித்தானியா

உக்ரேனிய சிறார்களை கடத்திச் சென்றதில் ரஷ்யா மீது தடைகள் விதித்த பிரித்தானியா

4 புரட்டாசி 2025 வியாழன் 12:29 | பார்வைகள் : 282


உக்ரேனிய சிறார்களை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு கடத்திச் சென்றதில் தொடர்புடைய 11 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானியா தடைகள் விதித்துள்ளது.

போரின் போது குடும்பத்தினர் அல்லது பாதுகாவலர்களின் அனுமதியின்றி 19,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஷ்யா அல்லது ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிக்கு கடத்திச் சென்றதாக உக்ரைன் கூறுகிறது.

 

இந்தக் கடத்தல்களை ஐ.நா. ஒப்பந்தத்தின் இனப்படுகொலை வரையறையை பூர்த்தி செய்யும் ஒரு போர்க்குற்றம் என்றும் உக்ரைன் அடையாளப்படுத்துகிறது. 

ஆனால், அப்பாவி சிறார்களை போரில் இருந்து காப்பாற்றுவதே தங்கள் நோக்கம் என்று ரஷ்யா பதிலளித்துள்ளது.

 

இந்த நிலையில், உக்ரேனிய குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடுகடத்துதல், போதனை செய்தல் மற்றும் இராணுவத்தில் ஈடுபடச் செய்தல் ஆகிய ரஷ்யாவின் கொள்கைகள் வெறுக்கத்தக்கது என்று பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், உக்ரைன் போருக்காக ரஷ்யா மீது பிரித்தானியாவின் சமீபத்திய சுற்று தடைகளையும் அவர் அறிவித்துள்ளார். Akhmat Kadyrov அறக்கட்டளையின் தலைவர் Aymani Nesievna Kadyrova உள்ளிட்டவர்கள் மீது பிரித்தானியாவின் தடைகள் பாய்ந்துள்ளது.

 

விதிக்கப்பட்டுள்ள தடைகளில் சொத்து முடக்கம், பயணத் தடைகள் மற்றும் பிற அபராதங்களும் அடங்கும். மார்ச் மாதத்தில் வெளியான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கை ஒன்றில்,

 

2022 இல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, ரஷ்யா மில்லியன் கணக்கான உக்ரேனிய குழந்தைகளுக்கு கற்பனை செய்ய முடியாத துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர்களின் உரிமைகளை மீறியுள்ளதாகவும் கூறியது.

 

இதனையடுத்து, 2023 மார்ச் மாதம் உக்ரேனிய குழந்தைகள் கடத்தல் தொடர்பில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா லவோவா-பெலோவா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்டுகளைப் பிறப்பித்தது.

 

ஆனால், ரஷ்யா அந்த கைதாணைகளை ஏற்க முடியாதவை என புறந்தள்ளியது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்