Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு; அவசர கால நிவாரணம் வழங்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு; அவசர கால நிவாரணம் வழங்க ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

3 புரட்டாசி 2025 புதன் 12:46 | பார்வைகள் : 104


ஆயத்த ஆடைஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, அவசரகால நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்' என, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல், மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தியதால், இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு நிவாரண உதவி வழங்க வேண்டுமென, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் உட்பட தமிழக தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இன்று (செவ்வாய்) நடந்த நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறையினரை சந்தித்தாார்.

அதில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல், நிதியமைச்சரிடம் அளித்த கடிதம்:

பருத்தி இறக்குமதிக்கான, 11 சதவீத இறக்குமதி வரியை, டிச., 31 வரை ரத்து செய்தது, ஆடை ஏற்றுமதித் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசின் நேரடி உதவியால், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலில் ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள முடியும். இந்திய ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியில், அமெரிக்கா முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த நிதியாண்டில், அந்நாட்டுக்கு மட்டும், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி, 95,000 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. ஆயத்த ஆடை மட்டும், 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளது.

திருப்பூர், நொய்டா, குருகிராம், பெங்களூரு, லூதியானா மற்றும் ஜெய்ப்பூர் கிளஸ்டர்கள், அமெரிக்க ஆர்டர்களை பெரிதும் சார்ந்துள்ளன. லட்சக்கணக்கான வேலை வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், அமெரிக்கா தவிர்க்க முடியாத முக்கிய இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா, தங்கள் நாட்டின் இறக்குமதி ஆடைகளுக்கான, பரஸ்பரம் 25 சதவீத வரியை காட்டிலும், கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இதனால், ஆடைகளுக்கான மொத்த வரிவிதிப்பு, 70 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த அபரிமிதமான வரி உயர்வு, இந்திய ஏற்றுமதியாளரின் போட்டித்திறனை பாதித்துள்ளது. குறிப்பாக, வங்கதேசம், வியட்நாம் நாடுகளுக்கான வரி குறைக்கப்பட்டு, இந்தியாவுக்கான வரி உயர்த்தப்பட்டதால், வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அமெரிக்க வரி உயர்வால், இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். ஆயத்த ஆடைஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, அவசரகால நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்.

போகஸ் மார்க்கெட்'


அமெரிக்க சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதியை பாதுகாக்க, 'போகஸ் மார்க்கெட்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கு, 20 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இத்தகைய சலுகையால், அமெரிக்க ஏற்றுமதி பாதிப்பை சமாளித்து, வர்த்கத்தை தக்கவைக்க முடியும்.

ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, வட்டி சமன்படுத்தும் திட்டத்தை புதிய வடிவில், ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டும். வட்டி மானியத்துக்கான உச்சவரம்பு விதிமுறைகளை தளர்த்தி, வட்டி சமன்படுத்தும் திட்ட சலுகையை, 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.

வங்கிக்கடன் சலுகை


ஏற்றுமதி தொடர்பான அனைத்து கடன்களுக்கும். அசல் தொகையை திருப்பி செலுத்த, இரண்டு ஆண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும் அல்லது அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தீரும் வரை நீட்டிக்கலாம். ஏற்றுமதியாளர்களின் வங்கி கணக்கை, செயல்படாத கணக்காக அறிவிக்கும் காலஅவகாசம், 90 நாட்கள் என்பதை, 180 நாட்களாக நீட்டிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலுக்கும், ஆடை ஏற்றுமதிக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, விரைவான நிவாரண உதவியை வழங்க முன்வர வேண்டும்.

அமெரிக்க பருத்தி நுாலிழை ஆடை


அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், பருத்தி பஞ்சில் உற்பத்தியான ஆடைகளுக்கு, பரஸ்பரம் வரி விலக்கு சலுகை வழங்க, அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்க வேண்டும். பரஸ்பரம் வரி சலுகை வழங்க வேண்டும்; இல்லாதபட்சத்தில், 20 சதவீதம் வரியை தள்ளுபடி செய்ய வலியுறுத்த வேண்டும். ஆடை உற்பத்தியில், அமெரிக்க பருத்தி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பருத்தி மற்றும் மூலப்பொருட்களில் உற்பத்தியான ஆடைகளை, மீண்டும் அமெரிக்கா ஏற்றுமதி செய்ய, முழுமையான வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்