Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா, சீனா அதிபர்களுடன் மோடி சந்திப்பு எதிரொலி: டிரம்ப் புலம்பல் அதிகரிப்பு!

ரஷ்யா, சீனா அதிபர்களுடன் மோடி சந்திப்பு எதிரொலி: டிரம்ப் புலம்பல் அதிகரிப்பு!

2 புரட்டாசி 2025 செவ்வாய் 14:53 | பார்வைகள் : 102


ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சு நடத்திய நிலையில், 'இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வணிகமே செய்கிறோம். அவர்கள் எங்களுடன் அதிகமாக வணிகம் செய்கிறார்கள்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் புலம்பல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவிடம் பெட்ரோலியம் வாங்குவதாக கூறி, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். எனினும், அவரது உருட்டல் மிரட்டல்களுக்கு மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்நிலையில், சீனாவில் நடந்த மாநாட்டில் ரஷ்யா மற்றும் சீன அதிபர்களை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு நடத்தியுள்ளார்.

இந்திய - அமெரிக்க உறவு சீர் குலைந்துள்ள நிலையில், ரஷ்யா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியது அனைத்து சர்வதேச ஊடகங்களிலும் செய்தி ஆகியுள்ளது. இந்நிலையில், தனது வழக்கமான சமூக ஊடகப் புலம்பலை இன்று டிரம்ப் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது அறிக்கை: இந்தியாவுடன் நாங்கள் மிகக் குறைந்த வணிகமே செய்கிறோம், ஆனால் அவர்கள் எங்களுடன் மிகப்பெரிய அளவிலான வணிகமே செய்கிறார்கள் என்பது சிலருக்குப் புரிகிறது.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் எங்களிடம் மிகப்பெரிய அளவிலான பொருட்களை விற்கிறார்கள், அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளராக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அவர்களிடம் மிக குறைவான பொருட்களை மட்டுமே விற்பனை செய்கிறோம்.

இதுவரை முற்றிலும் ஒருதலைப்பட்ச உறவு, அது பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. இதுவரை, இந்தியா எங்களிடம் அதிகமான வரிகளை வசூலித்துள்ளது. எல்லா நாட்டுடனும் ஒப்பிடும்போது எங்களது வணிகம் இந்தியாவுடன் மிக குறைவாகவே இருக்கிறது. இது முற்றிலும் ஒருதலைப்பட்ச பேரழிவாகும்.

மேலும், இந்தியா தனது எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை ரஷ்யாவிலிருந்து வாங்குகிறது, அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவாக மட்டுமே வாங்குகிறது. அவர்கள் இப்போது தங்கள் வரிகளை ஒன்றுமில்லாமல் குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால் அவர்கள் தாமதமாக வந்து உள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அதைச் செய்திருக்க வேண்டும். சில எளிய உண்மைகளை மக்களின் சிந்தனைக்கு முன் வைக்கிறேன்.இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தியா வரியை குறைக்க முன் வந்துள்ளதாக டிரம்ப் கூறியது பற்றி மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தாமே தடுத்து நிறுத்தியதாகவும், வர்த்தகத்தை காட்டி அவர்களது போரை நிறுத்தியதாகவும் டிரம்ப் கூறியதை, மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்