Paristamil Navigation Paristamil advert login

மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்

மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்

2 புரட்டாசி 2025 செவ்வாய் 06:41 | பார்வைகள் : 101


தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள், என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்று பயணத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசியதாவது: மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது.

எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது.

டிஜிபி பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்து கொள்ளவில்லை.

இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல்துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது.

மக்களுடைய பிரச்னை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது. நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?

இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்