Paristamil Navigation Paristamil advert login

திரிணமுல் போராட்ட மேடையை அகற்றிய ராணுவம்; மத்திய அரசு மீது மம்தா கோபம்

திரிணமுல் போராட்ட மேடையை அகற்றிய ராணுவம்; மத்திய அரசு மீது மம்தா கோபம்

2 புரட்டாசி 2025 செவ்வாய் 05:39 | பார்வைகள் : 102


கோல்கட்டாவில் ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் அமைத்து இருந்த போராட்ட மேடையை ராணுவம் அகற்றியது. பல முறை நினைவூட்டியும் அகற்றாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இதனை ஏற்காத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராணுவம் மூலம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அகதிகள் வெளிமாநிலங்களில் துன்புறுத்தப்படுவதாகவும், இதனை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அறிவித்து இருந்தது. இதற்காக கோல்கட்டாவின் மைதான் பகுதியில் உள்ள மஹாத்மா காந்தி சிலை அருகே மேடை அமைக்கப்பட்டது. இந்த இடம், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு பிராந்தியம் அமைந்துள்ள வில்லியம் கோட்டைக்கு அருகில் இந்த இடம் இருந்தது.

இந்நிலையில், இந்த போராட்ட மேடையை ராணுவத்தினர் இன்று அகற்றினர்.

இது தொடர்பாக கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 2 நாட்கள் மட்டுமே இந்த இடத்தில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. 3 நாட்களுக்கு மேல் நடக்கும் நிகழ்வுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். 2 நாட்கள் மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு ஒரு மாதத்துக்கு மேல் தற்காலிக மேடை அமைத்து இருந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மேடையை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த மேடை அகற்றப்படவில்லை. இதனையடுத்து கோல்கட்டா போலீஸ் கமிஷனரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அந்த மேடையை ராணுவத்தினர் அகற்றினர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பிரதமர் மோடி மேற்கு வங்கம் வரும் போது எங்களிடம் அனுமதி பெற வேண்டும். எங்களின் குரலை அவர்களால் தடுக்க முடியாது. மேற்கு வங்கத்துக்கு எதிராக அட்டூழியம் தொடர்ந்தால், தினமும் போராட்டத்தில் ஈடுபடுவோம். ராணுவம் மீது குற்றம் இல்லை. அதற்கு பாஜ உத்தரவிட்டு உள்ளது. இது மோசமான அரசியல் விளையாட்டு. போராட்டகளத்தை வேறு இடத்திற்கு மாற்ற கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பாஜ.,வின் செயல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ராணுவத்தை தவறாக பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டினார்.

பாஜ வரவேற்பு

ராணுவத்தின் நடவடிக்கைக்கு பாஜ வரவேற்பு தெரிவித்துள்ளது. உரிய அனுமதி இல்லாமல் திரிணமுல் காங்கிரஸ் போராட்ட மேடை அமைத்து இருந்தது. பாஜ போராட்டத்துக்கு அவர்கள் அனுமதி வழங்கியது இல்லை. திரிணமுல் காங்கிரசுக்கு எதிராக ராணுவம் எடுத்த நடவடிக்கை சரியானதே. இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்