தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்: ஜெர்மனிவாழ் தமிழர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

1 புரட்டாசி 2025 திங்கள் 09:12 | பார்வைகள் : 138
தமிழகத்திற்கு முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள் என ஜெர்மனிவாழ் தமிழர்களிடம் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் எட்டு நாள் பயணமாக, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சென்றுள்ளார். ஜெர்மனி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, அங்கு வாழும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று, உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இன்று ஜெர்மனிவாழ் தமிழர்களை சந்தித்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழகத்துக்கு வாருங்கள், நமது திராவிட மாடல் அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!
உங்கள் சகோதரன்தான் முதல்வராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பாசம்
ஜெர்மனி வாழ் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதலில் எல்லோருக்கும் அன்பான வணக்கம். நல்லா இருக்கீங்களா? பல்லாயிரம் கிலோ மீட்டர்களை கடந்து, வேறு ஒரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சி தான். உண்மையான தமிழ் பாசம். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தமிழன் இருப்பான். தமிழ்க் குரலை கேட்கலாம் என்று சொல்கிற அளவுக்கு உலகெல்லாம் பரவி தனது அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கும் இனம் தான் நமது தமிழினம்.
தமிழகத்திற்கு வாருங்கள்!
ஜெர்மனியில் தமிழர்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. தமிழகம் தொழில் துறையில் முன்னேறி உள்ளது. தமிழகம் வளர வேண்டும். முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஊக்குவித்து நீங்கள் முடிந்தளவுக்கு உதவி செய்ய வேண்டும். தமிழர் என்ற அடையாளத்தை விட்டுவிடாதீர்கள். உங்கள் வேர்களை, தமிழை மறக்காதீர்கள். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழகத்துக்கு குழந்தைகளோடு வாருங்கள். தமிழகத்தின் வளர்ச்சியை, மாற்றத்தை பாருங்கள்.
உதவ வேண்டும்
நமது பண்பாட்டை, எழுச்சியை எடுத்துச் சொல்லும் கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள், கலைஞர் உலகத்திற்கு குழந்தைகளை அழைத்து வந்து சுற்றிக் காட்டி வரலாற்றை சொல்லிக் கொடுங்கள். சின்னதா பிஸ்னஸ் செய்தாலும், உங்க தொழிலை தமிழத்திலும் தொடங்குங்க. பெரிய நிறுவனங்களில் வேலை செய்தால் தமிழகத்தில் தொழில் தொடங்க வலியுறுத்துங்கள். உங்கள் சொத்த கிராமங்களை கவனித்து கொள்ளுங்கள். அங்கு படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை எளிய மாணவர்களுக்கு உங்களால் முடிந்த கல்வி உதவியை செய்யுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025