‘மதராஸி’ முதல் விமர்சனம்... படம் எப்படியிருக்கு?

31 ஆவணி 2025 ஞாயிறு 17:10 | பார்வைகள் : 1115
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியானது ‘சர்க்கார்’. இதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் படம் தோல்வி அடைந்தது. எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. 2020-ல் ‘தர்பார்’ வெளியானது. அதன் பிறகு 4 ஆண்டுகளாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எந்தப் படமும் வெளியாகவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளியானது. சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்த இந்த பாலிவுட் திரைப்படம் படுதோல்வியடைந்தது. தொடர் தோல்விகளில் இருக்கிறார் முருகதாஸ். அடுத்து அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் மூலம் முருகதாஸ் கம்பேக் கொடுப்பாரா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படதிதல் வித்யூத் ஜாம்ப்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. காதல் + அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பிய இந்த ட்ரெய்லரில் வசனங்கள் கவனிக்க வைத்தன. ‘துப்பாக்கி யார் கையில இருந்தாலும் நான் தான்டா வில்லன்’ என வித்யூத் ஜம்வால் பேசுவது, டான்சிங் ரோஸ் ஷபீரின் வில்லத்தனம் ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கும் என தெரிகிறது. அத்துடன் மலையாள நடிகர் பிஜூ மேனன் நடித்திருப்பது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் குறித்து திரைத்துறையை சேர்ந்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான வித்தர்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்திலிருந்து ‘மதராஸி’ படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏ.ஆர்.முருகதாஸ் - அனிருத் - சிவகார்த்திகேயன் மூவரின் சரவெடி” என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.